குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Wednesday, January 28, 2009

91.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா???? - II


சென்ற பதிவு இதன் முதல் பகுதியாகும்.இப்போது இரண்டாம் பகுதி....

0 0 0

இராகங்களின் மேற்சொன்ன பகுப்புகளுக்கு மேலாக ஆண் இராகங்கள் எனவும் பெண் இராகங்கள் எனவும் பகுக்கப்பட்டிருந்தன.

இனி இசை நிகழ்ச்சி நடத்த தேவையான சூழல் பற்றிப் பார்க்கும் போது பக்கவாத்தியங்கள் எனப்படும் இசைக்கருவிகளுடன் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பெற்றன.

பழந்தமிழ் நாட்டில் ஐந்து வகையான இசைக்கருவிகள் புழக்கத்தில் இருந்தன.அவை தோல் கருவி,துளைக்கருவி,நரம்புக்கருவி,கஞ்சக்கருவி மற்றும் மிடற்றுக் கருவி என்பன.

தோல்கருவிகள் பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டு தோலால் கட்டப்பட்டவை.அவை பேரிகை,படகம்,இடக்கை,உடுக்கை,மத்தளம்,சல்லிகை,கரடிகை,திமிலை,குடமுழா,தக்கை,கணப்பறை,தமருகம்,தண்ணுமை,தடாரி,அந்தரி,முழவு,சந்திரவலையம்,மொந்தை,முரசு,கண்விடு தூம்பு,நிசாளம்,துடுமை,சிறுபாறை,அடக்கமு,தகுணிச்சம்,விரலேறு,பாகம்,உபாங்கம்,நாழிகைப்பறை,துடி,பெரும்பாறை ஆகியவை.

துளைக்கருவிகள்:புல்லாங்குழல்,நாகசுரம்,முகவீணை,மகுடி,தாரை,கொம்பு,எக்காளை ஆகியவை.இவை மரத்தாலும் உலோத்தாலும் செய்யப்பட்டவை.சங்கு மற்றொன்று,இது இயற்கையாகவே விளைவது.குழல் மூங்கிலில் செய்யப்படுவது.

நரம்புக்கருவிகள்:மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகளால் பூட்டப்பட்டவை;இவை யாழ்,வீணை,தம்பூரா,கோட்டு வாத்தியம்,பிடில் முதலியன.

யாழ் பற்றிச் சொல்ல சில சிறப்புச் செய்திகள் இருக்கின்றன.இந்தியாவின்,பழந்தமிழ் நாட்டின் மிகப் பழைய இசைக்கருவிகளில் ஒன்றான யாழ் தமிழகத்திலிருந்த உலகம் முழுக்கப் பரவிய இசைக்கருவிகளில் ஒன்று.

உருவ அமைப்பில் உண்மையான யாழ் வில் போன்ற வடிவு கொண்டது.இதன் மறுபெயர் வீணை என்பது ஆகும்.சிலம்பில் கூறப்படும் ‘நாரதவீணை நயந்தெரி பாடல்’ எனக் கூறப்படும் வரிகளால் சுட்டப்படுவதும் யாழ் என்னும் இசைக்கருவிதான்.ஆனால் இதில் சுட்டப்படுவது வில் வடிவில் இருக்கும் யாழ்தான்.இப்போதைய குடவீணை பிற்காலத்தில் வடிவமைக்கப்பட்டது.

யாழ் வாசிப்பில் மிகுதிறமை பெற்ற ஒரு வகுப்பினரே பழந்தமிழகத்தில் இருந்தார்கள்;அவர்கள் யாழ்ப் பாணர் என்றழைக்கப்பட்டனர்.பாணர்களில் ஒருவருக்கு நாயன்மார் வரிசைகளில் இடம்கொடுத்து அழகு செய்தது பழந்தமிழகம்.தேவாரப்பண்களுக்கு பண்ணும் இசையும் செய்வித்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் என்று வரலாறு கூறுகிறது.

மேலும் இலங்கையின் யாழ்ப்பாணம் என்னும் ஊர் ஒரு யாழ் வாசிப்பில் நல்ல திறன் பெற்ற ஒரு பாணருக்கு இலங்கை அரசனால் பரிசளிக்கப்பட்ட ஊராதலின் அந்த ஊருக்க யாழ்ப்பாணம் என்று பெயர் ஏற்பட்டது என்ற ஒரு செய்தியும் படிக்கக் கிடைத்தது.

வள்ளுவப் பெருந்தகை இசையின் இனிமையைக் குறிக்க முற்பட்ட போது கையாண்ட சொல்லாடல் “குழலினிது,யாழினிது என்பர்” என்பதுதான்.புல்லாங்குழலும் வீணையும் குழலுக்கும் யாழுக்கும் எடுத்துக்காட்டுகாளாக விளங்கும் இசைக்கருவிகள்.


இவ்வளவு அகன்ற கருத்துக்கள் இசைக்கருவிகள் பற்றியே தமிழில் இருக்கையில் தமிழ் எந்த அளவு இசையில் செறிவு கொண்டிருக்க வேண்டும்?
மேலும் ஒரு செய்தி ஆராயத் தக்கது.சிறந்த இசைக்கருவிகள் என அறியப் படும் காலத்தால் முற்பட்ட கருவிகள் மூன்று.அவற்றின் பெயர்கள்

குழல்
யாழ்
முழவு அல்லது முழவம்

இந்த மூன்று இசைக்கருவிகளின் பெயர்களிலும் தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பான ‘ழ’ என்னும் எழுத்து இருக்கிறது.எனவே இன்றைய இராகங்கள் சுரங்கள் முதலியவற்றின் தோற்றுவாய் தமிழ் மொழியிலையே இருந்திருக்க வேண்டும்.தமிழின் இசைச் செறிவுக்கு இது மேலும் ஒரு வலிய சான்றாக இருக்கிறது.

இவ்வளவு நீண்ட விளக்கங்கள் இசைக்கருவிகள் பற்றி தமிழில் இலக்கியங்களில் இருக்கும் செய்திகளைப் பட்டியலிட்ட நோக்கம் இசைக்கும் தமிழுக்குமான ஆழ்ந்த செறிந்த தொடர்பு 2000 வருடத்திற்கும் முற்பட்டது என்பதை சுட்டவே.2 ம் நூற்றாண்டின் திருக்குறள் காலத்திலேயே குழல்,யாழ் போன்ற கருவிகள் செறிவாகப் பயன்பட்டிருக்கம் போது அதற்குப்பல காலம் முன்பே இசை,இராக விதிகள் பற்றிய தெளிவு தமிழில் இருந்திருக்க வேண்டும்.


தமிழில் பாரம்பரிய இசை தேய்ந்த காரணம்:
இந்த நிலையில் தெலுங்கும் வடமொழியும் பாரம்பரிய இசைக்கு உரிமை கொண்டாடியதும் தமிழில் இசை நம் காலத்தில் தேய்ந்த நிலைக்குச் சென்றதற்குமான காரணம் என்ன?

கால வரிசையின் படிப்பார்க்கையில் தொல்காப்பிய காலத்திலிருந்து அல்லது அதற்கு முன்பான காலத்திலிருந்தோ இசைக்கான தனி நூல்கள் இருந்தது(பரிபாடல் போன்ற) பற்றிய செய்திகள் இருக்கின்றன.அதாவது சுமார் கிமு 2 லிருந்து கிபி 5 வரை.

பின்னர் வந்த பக்தி இலக்கிய காலத்தில்-கிபி 7 ல் இருந்து கிபி 12 வரை திருமுறைகள் மற்ற தமிழ்ப்பாடல்களில் இசையும் பண்ணும் சார்ந்த குறிப்புகள் இருக்கின்றன.

இக்கால கட்டத்தில் சங்கீத ரத்நாகரம் என்ற ஒரு நூல் வடமொழியில் எழுதப்பட்டது.எழுதியவர் நிசங்க சார்ங்க தேவர் என்பவர்.இந்த நூல் இன்று கர்நாடக சங்கீதத்துக்கமான ஒரு முக்கிய தொடர்பாக குறிக்கப்படுகிறது.ஆனால் இந்த நூலில் தேவாரப்பதிகங்களில் அமைந்திருக்கும் பல பண்களும் அவற்றின் பெயர்களும் கையாளப்பட்டிருக்கின்றன.எனவே இந்த நிசங்கர் தமிழகத்திற்கு வந்து தமிழைக் கற்று தமிழில் நிலவிய இசை பற்றிய அறிவை வடமொழியில் எழுதினார் என்பது கண்கூடு.


பின்னர் வந்த கால கட்டங்களில் பல இனத்தவர்கள் சார்ந்த ஆட்சிக் குழப்பங்கள் தமிழகத்தில் ஏற்பட்டன;மராத்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,முகம்மதியர்,சுல்தான்கள்,நிஜாம்கள் என்ற குழப்பக் கூட்டங்கள் தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் ஆட்சிப்பொறுப்பில் வந்தனர்.எனவே இக்கால கட்டங்களில் தமிழின் சிறப்பியல்புகள் குறித்து பெருமிதப்படவோ,தகுதிகளைக் கொண்டாடவோ எவரும் இல்லாது போயினர்.

இந்தக் காலகட்டத்தில்தான் அருந்தமிழ் நூல்கள் பலவும் அழிந்து பட்டிருக்க வேண்டும்.

இந்த நிலையில்தான் ஞானசம்பந்தர் போன்ற பெரியவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு நினைவு கூறத்தக்கது;கிபி 2-4 ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு கிபி 6 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம் வரையிலும் கூட தமிழ் மொழி இவ்வாறு அழிந்து பாழ்பட்ட நிலையில்தான் இருந்தது.இக்காலகட்டத்தில்தான் பக்தியின் பாற்பட்டு முகிழ்ந்த ஞானசம்பந்தர்,நாவுக்கரசர் போன்றவர்கள் தமிழுக்கு இருந்த வாடிய நிலை கண்டு பல அமரத்துவம் வாய்ந்த திருமுறைப் பாடல்களை இயற்றி தமிழ்மொழியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார்கள்.

சம்பந்தர் தேவாரத்தின் 3000 பாடல்களில் சுமார் 10,20 பாடல்களுக்கு ஒருமுறை தன் பெயரை விளிக்கும் நிலை வந்த போதெல்லாம் தமிழையும் சேர்த்து தமிழ் ஞானசம்பந்தன் என்றே விளித்துச் செல்கிறார் சம்பந்தர்.
இது மட்டுமின்றி தாழ்ந்த குலம் எனக் கருதப்பட்டிருந்த பாணர் குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வாருக்கு,தனக்குக் கிடைத்த மரியாதைக்குச் சரியான மரியாதையை எல்லா இடங்களிலும் வழங்கவைத்த பெரியார் அவர்.அவரைக் குறிக்குப் பல இடங்களிலும் பாணரை ஐயர் என்றே குறிப்பிட்டு பெருமைப்படுத்திய சமூகப் போராளி அவர்.

15ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவர் போன்ற அருந்தமிழ்த் தொண்டர்கள் இல்லாது போயின காலம்தான் தமிழ் தாழ்ந்துபட்டது.

இதன் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயருக்குக் கீழ் அதிகாரத்தில் இருந்த பலருக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லாதிருந்தது.
இந்த கால கட்டத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகள் கட்டமைப்பு ஏற்பட்டது.அவர்கள் தெலுங்கிலும் வடமொழியிலும் கீர்த்தனைகளைப் பொழிந்து தள்ளினார்கள்,அவை பெருமைப்படுத்தப் பட்டு எங்கும் பாடப் பட்டன;காரணம் அன்றைய அரசர்கள் அல்லது சமஸ்தானாதிபதிகள் அனைவரும் தெலுங்கர்கள்.அவர்களை மகிழ்ச்சிப்படுத்த தெலுங்கு கீர்த்தனைகளாலேயே முடிந்தது.

இசை என்பதன் ஆன்மா ஒன்றுதான்;அது வெளிப்படும் வடிவங்கள் தான் பாடல்கள் அல்லது கீர்த்தனைகள்.இவை எந்த மொழியில் அமைந்தாலும் இசையை ரசிக்கலாம்.ஆனால் இசையின் ஆன்மா எப்போது தங்குதடையின்றி உணரப் படும் என்றால்,அது உயிரைத் தொடும் போது ! அதற்கு கேட்பவர்களுக்குப் புரியும்படி இருக்க வேண்டும் பாட்டு;இல்லையெனில் நாம் துணிந்து சொல்ல வேண்டும் நிப்பாட்டு என !

சரி,இக்காலத்திலும் ஏன் அந்த வேற்று மொழிப்பாடல்களே நிலை பெற்றுப் போயின? பாடுபவர்களின் அறியாமை மற்றும் கேட்கும் நம் மூடத்தனம்.

‘ப்ரோவ பாரமா,ரகுராமா’ என்று அழைக்கும் காகுந்தனை ‘அலைபாயுதே,கண்ணா’ என்றும் விளித்துக் கொஞ்சலாம்.பின்னதின் நெருக்கமும் அன்பும் முன்னதில் இல்லை என்பதை பாடுபவர்கள் புரிந்து கொள்ளாத அறியாமை;’ப்ரோவ பாரமா’ நமக்கானது அல்ல என அந்த வேற்றுமொழிக் கீர்த்தனைக்காக நமது சங்கீதத்தையே தூக்கியெறிந்து விட்டு ‘நாக்குமுக்குவில்’ நம்மைத் தொலைத்து விட்டு நிற்கும் கேட்பவர்களான நம் மூடத்தனம்.

மிகப்பிற்காலத்திலே தோன்றிய இக்கீர்த்தனைகளின் வரவு பற்றிய பெரியவர் திருவிக அவர்களின் கூற்று பின்வருமாறு:

“தமிழ்நாடு விருந்தோம்புவதில் பேர் பெற்றது;எல்லாத் துறைகளிலும் அது விருந்தோம்பியுள்ளது.தமிழ்நாடு கீர்த்தனை விருந்தையும் ஓம்பியது;அதனால் நாட்டுக்கு விழைந்த நலன் சிறிது,தீங்கோ பெரிது.

கீர்த்தனை தமிழ்நாட்டில் கால் வைத்ததும் அதற்கு வரவேற்பு நல்கப்பட்டது.தமிழில் கீர்த்தனைகள் யாக்கப்பட்டன.அந்நாளில் பெரும் பெருஞ் சிங்க ஏறுகள் இருந்தன.முத்துத்தாண்டவர்,கோபாலகிருஷ்ண பாரதியார்,அருணாசலக் கவிராயர் முதலியோர் சிங்க ஏறுகள் அல்லவா?அவர்களால் யாக்கப்பட்ட கீர்த்தனைகளில் பொருளும் இசையும் செறிவதாயின.இந்நாளில் கலைஞரல்லாதாரும் கீர்த்தனைகளை எளிதில் எழுதுகின்றனர்.அவைகள் ஏழிசையால் அணி செய்யப்படுகின்றன.அவ்வணியைத் தாங்க அவைகளால் இயலவில்லை.கலையற்ற கீர்த்தணைகளின் ஒலி காதின் தோலில் சிறிது நேரம் நின்று அரங்கம் கலைந்ததும் சிதறிவிடுகிறது,இதுவோ இசைப்பாட்டின் முடிவு?

இசைப்பாட்டு இயற்கையில் எற்றுக்கு அமைந்தது?புலன்களின் வழிப்புகுந்து,கோளுக்குரிய புறமனத்தை வீழ்த்திக்,குணத்துக்குரிய அகக்கண்ணைத் திறந்து,அமைதி இன்பத்தை நிலைபெறுத்துதற்கென்று இசைப்பாட்டு இயற்கையில் அமைந்தது,இது இசைப்பாட்டின் உள்ளக் கிடக்கை;இதற்கு மாறுபட்டது இசைப்பாட்டாகாது!”

நான் மேலே சொன்னவற்றை செறிந்த தமிழில் கூறியிருக்கிறார் திருவிக அவர்கள்.

அதெல்லாம் சரி,இப்போது என்ன செய்யச் சொல்கிறாய் எனக் கேட்கிறீர்களா?

முதலில்:எங்கெல்லாம் இசைக் கச்சேரிகள் நடத்தும் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் நாக்குமுக்கா நாறத்தனங்களைத் தவிர்த்து விட்டு நல்ல இசைக் கச்சேரிகளை நடத்துங்கள்,பாடுவோருக்கு முக்கியமான குறிப்பு அல்லது வேண்டுகோள் அல்லது அறுவுறுத்தலுடன்;அது தமிழ்ப் பாடல்கள் மட்டும் பாடுங்கள் என்பது.அவர்கள் மறுக்க மாட்டார்கள்,ஏனெனில் பணம் கிடைக்கிறது.அதாவது பிறமொழிப் பாடல்கள் பாடினால் பணம் கிடைக்காது என்ற நிலை வரவேண்டும்.பிறமொழிப்பாடல்களே மட்டுமே ரசிப்போம் என்பவர்கள் கூட்டத்தில் அவர்கள் அந்த மொழிகளில் பாடிக் கொள்ளட்டும்.

பிறகு:உங்கள் குழந்தைளுக்கு பாரம்பரிய இசை என்னும் கர்நாடக சங்கீதப் பயிற்சி அளியுங்கள்.சரியான நேரத்தில் அவர்களைத் தமிழ்ப்பாடல்கள் பக்கம் திருப்பி விடுங்கள்.தமிழில் பாடல்கள் இல்லை என்ற நிலையிலா இருக்கிறது? போதும் போதும் என்ற அளவில் கொட்டிக் கிடக்கிறது.திருமுறைகளில் தொடங்கி இந்த,சென்ற நூற்றாண்டுக் கால அருணாசலக் கவிராயர்,அநந்த பாரதிகள்,கவி குஞ்சர பாரதி,கனம் கிருஷ்ணய்யர்,இராமலிங்க அடிகள்,கோபாலகிருஷ்ண பாரதி,கோடீசுவர ஐயர்,பட்டனம் சுப்பிரமணிய அய்யர்,மாரிமுத்துப் பிள்ளை,மாயவரம் வேதநாயகம் பிள்ளை,முத்துத்தாண்டவர்,மாம்பழக் கவிராயர்,அண்ணாமலை ரெட்டியார் போன்று அடுக்கிக் கொண்டே போகலாம்.ரெட்டியாரின் காவடிச்சிந்து பாடல்கள் எல்லாம் அவ்வளவு இனிமை வாய்ந்தவை.


சென்னிக் குளநகர் வாசன்,தமிழ் தேறும் அண்ணாமலை
தாசன்


என்னும் பாடலை அதன் இசை மற்றும் தாளக் கோர்வையில் கேட்டுப் பாருங்கள்;சொக்க வைக்கும் பாட்டு அது !

அந்தத் துறையிலேயே நுழையாது இசை மற்றும் சங்கீதத்தை ஒரு சாதியாருக்கு சொத்தாக இருக்க அனுமதித்துவிட்டு பார்ப்பனர்களின் அட்டூழியம் என்று ஜல்லியடிப்பதில் அர்த்தமில்லை !

இசைத்தமிழை மீட்டெடுப்பது நம் கையில்தான் இருக்கிறது,மற்றெவர் கையிலும் இல்லை !!!


ஒரு அவசியப் பிற்சேர்க்கை:
இந்தப் பதிவுத் தொடரில் நான் சாஸ்திரிய சங்கீதம் என்று சொல்லப்படுவது இன்றைய வடிவில் கர்நாடக சங்கீதம் மட்டும்தானா என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு அதற்கு விடை காண முயன்றிருக்கிறேன்.தமிழில் உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவும் நாட்டுப் புறப்பாடல்களும் நல்ல மெட்டில் அமைந்த பாடல்களே.
அவை பெரும்பாலும் சங்கீதக்கட்டுகளுக்குள் அகப்படாமல் உணர்வுகளை மேலெடுத்துச் செல்லும் பாடல்கள்;அவற்றின் முதல் நோக்கம் உணர்வுகள் நல்ல சந்த மெட்டுக்களில் கேட்பவர் உள்ளத்தைத் தைக்க வேண்டும் என்ற நோக்கம் பற்றி எழுந்தவை.
சாஸ்திரிய சங்கீதம் என்பது சங்கீத நுணுக்கங்களை அறிந்து பிரயோகித்துப் பாடுபவர் பாடும்
பாடல்கள்.
இனிப்பு பொதுவாக சுவையுடையது எனினும் வெல்லப்பாகு நேரடியான பாசாங்குகள்,அலங்காரங்கள் இல்லாத இனிப்பு;ஆனால் பாதாம் அல்வா செய்ய ஏகப்பட்ட
பக்குவங்கள் வேண்டும்;இந்த வித்தியாசம்தான் இரண்டு இசைக்கும்.

இன்னொரு பிற்சேர்க்கை:


நண்பர் ஜீவா அவர்கள் தமிழிசை என்ற தலைப்பில் ஐந்து பதிவுகள் எழுதி இருக்கிறார்.

பாடகி சௌம்யா அவர்கள் அகநாநூற்றுக் காலத்தில் இருந்து பாபநாசம் சிவன் வரை தமிழ்ப்பாடல்களூடாகச் சென்ற இசைப்பயணம் பற்றிய ஐந்து பதிவுகள் அவை.அவற்றைக் கேட்கும் போது இசைப்பயிற்சி இருந்தால் தமிழின் காப்பியங்கள் அனைத்திலும் பாரம்பரிய இசைக்கான் வடிவத்துடன் கூடிய ஆயிரமாயிரம் பாடல்களைத் தேர்ந்து எடுக்கலாம் எனத் தோன்றுகிறது.

அந்த பாடல்களை வழங்கிய சௌம்யா அவர்களுக்கும் தேடிப் பதிவிட்ட நண்பர் ஜீவா அவர்களுக்கும் நன்றிகள் பல!

Monday, January 26, 2009

92.ஒரு நேர்மறை பத்திரிகையாளரின் வாக்குமூலம்

இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் போர்நடவடிக்கைகள் புலிகளுக்கு எதிராக இருப்பதை விட அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதைத்தான் முக்கியமாகச் செய்து வருகிறது என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளக் கூடியது.

இதே சமயத்தில் புலிகளைப் பற்றிய வன்மையான கண்டனங்ளும் ஆங்காங்கே எழுகின்றதையும் பார்க்கிறோம்.

இது போன்ற சூழலில் சமீபத்தில் இலங்கையின் ஒரு பத்திரிக்கையாளர்(லசந்த விக்ரமசிங்க) படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்.அவர் இறக்கும் முன் எழுதி வைத்திருந்த பத்திரிகைக்கான தலையங்கம் இன்றைய இலங்கை நிலையை முற்றாக முன்வைக்கிறது எனத் தோன்றுகிறது.

சண்டே லீடரில் பணிபுரிந்து கொண்டிருந்த அவர் மகிந்தவின் இளமைக்கால நண்பராகத் தன்னை சுட்டிக்கொண்டிருக்கும் நேரத்திலும் அவரின் தலையங்க வரிகள் மகிந்த செய்யும் அராஜகங்களை முன்வைக்கின்றன.

தமிழக சூழலில் கூட இது போன்ற தார்மீக தைரியத்துடன் செயல் படும் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வியை முன் வைக்கிறது இவருடைய எழுத்து !


(இலங்கையிலிருந்து வெளியாகும் 'சண்டே லீடர்' என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க, 11-01-2009 வெளியாக வேண்டிய இதழுக்காக கடந்த ஜனவரி 7-ம் தேதி எழுதிய தலையங்கம் இது. இதை எழுதி முடித்த மறுநாளே அவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். தனது மரணத்தின் பாதையை அறிந்திருந்த அவருடைய மரண சாசனமாக இந்த தலையங்கம் அமைந்துள்ளது.)

ராணுவத்தைத் தவிர வேறு எந்த ஒரு தொழிலும் - தொழில் நிமித்தமாக - அந்த தொழில்புரிபவர்களின் உயிரை பலியாக கேட்பதில்லை: இலங்கையில் இந்த வகையில் பத்திரிகைத் தொழிலும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. மின்னணு மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்படுவது, வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளாவது, மூடப்படுவது, பலவந்தமாக நிறுத்தப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. எண்ணற்ற செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர். இந்த அனைத்தும் - கடைசி அம்சம் உட்பட - எனக்கும் பொருந்தும் என்பது எனக்கு மிகவும் சிறப்பு செய்வதாக உள்ளது.

பத்திரிகைத் தொழிலில் மிக நீண்ட காலமாக நான் இருந்து வருகிறேன். உண்மையில், இந்த 2009ம் ஆண்டு, சண்டே லீடர் பத்திரிகையின் 15ம் ஆண்டாகும். இந்த காலக்கட்டத்தில் இலங்கையில் பல மாறுதல்கள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலான மாற்றங்கள் விரும்பத்தக்கவை அல்ல என்பதை நான் உங்களுக்கு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. எல்லையில்லா ரத்த தாகம் கொண்டவர்களால் இரக்கமற்று தொடுக்கப்பட்ட உள்நாட்டுப்போரின் மத்தியில் நாம் இருக்கிறோம். பயங்கரவாதிகளாலோ, அரசாங்கத்தாலோ ஏவப்படும் பயங்கரவாதம் என்பது நமது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. சுதந்திரத்தை முடக்கவிரும்பும் அரசு முக்கிய நடவடிக்கையாக படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது. இன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர். நாளை நீதிபதிகள் கொல்லப்படுவார்கள். இந்த இரு தரப்பினருக்கும் ஆபத்துகள் அதிகரிக்கின்றன. நம்பிக்கைதான் குறைந்து வருகிறது.

இருந்தபோதிலும் ஏன் இந்த தொழிலை தொடர்ந்து செய்கிறோம் என்று நான் அவ்வபோது ஆச்சரியப்படுவதுண்டு. நானும் ஒரு கணவன்தான். எனக்கும் மூன்று அருமையான குழந்தைகள் உள்ளனர். எனக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உள்ளன, நான் சட்டம் அல்லது பத்திரிகை ஆகிய எந்தத் துறையில் இருந்தாலும். ஆபத்துகளை விலை கொடுத்து வாங்குவது தேவைதானா? தேவையில்லை! என்றே பலரும் கூறுகின்றனர். நண்பர்கள் என்னை வழக்குரைஞர் தொழிலுக்கு திரும்புமாறு கூறுகின்றனர். அத்தொழில் எனக்கு மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான வாழ்வை தரும் என்று அவர்கள் நம்புகின்றனர். மற்றவர்கள், குறிப்பாக இரு தரப்பிலும் உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலுக்கு வருமாறு என்னை அழைக்கின்றனர், நான் விரும்பும் துறைக்கு என்னை அமைச்சராக்குவதாகவும் கூறுகின்றனர். இலங்கையில் பத்திரிகையாளர்கள் சந்திக்கும் ஆபத்துகளை உணர்ந்த வெளிநாட்டுத்தூதர்கள், என்னை இலங்கையிலிருந்து வெளியேறுமாறும் - அவர்கள் நாட்டில் பாதுகாப்பாக வசிக்குமாறும் அழைக்கின்றனர். எனக்கு முன்னால் பல வாய்ப்புகள் இருந்தாலும், அதில் ஒன்றைக்கூட நான் செய்வதாக இல்லை.

உயர்ந்த பதவி, புகழ், செல்வம், பாதுகாப்பு போன்றவை அழைத்தாலும், அவற்றிற்கெல்லாம் மேலாக உள்ளுணர்வின் அழைப்பே முக்கியமாக இருக்கிறது.

நாங்கள் என்ன பார்க்கிறோமோ அதை, அவ்வாறே மண்வெட்டி என்றோ, திருடன் என்றோ, கொலைகாரன் என்றோ அப்படியே எழுதுவதால் சண்டே லீடர் பத்திரிகை சர்ச்சைக்குரிய ஒன்றாக விளங்குகிறது. நாங்கள் வார்த்தை விளையாட்டுகளுக்கு பின்னே பதுங்குவதில்லை. நாங்கள் வெளியிடும் புலனாய்வு செய்திகள் அனைத்தும் உரிய ஆதாரங்களுடன் வெளியிடப்படுகின்றன. அதற்காக ஆபத்து வரும் வாய்ப்புகள் இருப்பது தெரிந்தும் எங்களுக்கு ஆதாரங்களை வெளிப்படுத்தும் சமூகப்பொறுப்புள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பல ஊழல்களை வெளிக்கொணர்ந்து இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் நாங்கள் தவறு செய்துவிட்டதாக யாரும் நிரூபித்தது இல்லை. அதேபோல எங்களுக்கு எதிரான எந்த வழக்குகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதும் இல்லை.

சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்கு காட்டும். பத்திரிகைகளின் மூலமாகத்தான் நாட்டின் நிலை குறித்தும், நாட்டை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் குறித்தும் மக்கள் அறிந்துகொள்ள முடியும். இந்த தலைவர்கள்தான் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சில நேரங்களில் இந்த கண்ணாடியின் மூலம் நீங்கள் பார்க்கும் உருவம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லாமல் இருக்கிறது. இந்நிலைக்காக நீங்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்காக அந்த கண்ணாடியை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள் மிகப்பெரும் ஆபத்தில் இருக்கின்றனர். இதுதான் எங்களுக்கான அழைப்பு - நாங்கள் புறக்கணிக்க முடியாத அழைப்பு.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எங்கள் பார்வையை நாங்கள் மறைத்ததில்லை. இலங்கையை ஒரு வெளிப்படையான, மதசார்பற்ற, சுதந்திர ஜனநாயக நாடாக நாங்கள் பார்க்க விரும்பினோம். இந்த வார்த்தைகளுக்கு உள்ளே இருக்கும் பொருளை கவனியுங்கள். வெளிப்படையாக என்றால் அரசு என்பது மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாக, அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தவறாக பயன்படுத்தாததாக இருக்க வேண்டும். மதசார்பின்மை என்பது, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட - பல கலாசாரங்களை கொண்ட நம்முடைய சமூகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கான முக்கியமான கருத்தாகும். சுதந்திரம் என்பது, மனிதர்கள் பலவிதங்களில் வித்தியாசமாக படைக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்கள் இருக்கும் முரண்பட்ட விதங்களிலேயே ஏற்றுக்கொள்வதுமாகும். நாம் விரும்பும் விதத்தில் அவர்கள் இருக்க வேண்டும் என்று கூறுவதல்ல. மேலும் ஜனநாயகம் என்பது… இது ஏன் முக்கியமானது? என்பதையும் நான் விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், மன்னிக்கவும்! நீங்கள் இந்த பத்திரிகையை வாங்குவதை நிறுத்திவிடுவதே நல்லது.

பெரும்பாலானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக ஒரு கருத்தை கேள்விகேட்காமல் எழுதுவதன் மூலம் - பிரதிபலிப்பதன்மூலம் சண்டே லீடர் பத்திரிகை பாதுகாப்பு தேடியதில்லை. கருத்து முரண்பாடுகளை எதிர்கொள்வதன் மூலமாகவே இதுவரை பத்திரிகையை நடத்தி வந்திருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக நாங்கள் கூறிய கருத்துகள் மக்களில் பலருக்கும் சுவை அளிப்பதாக இல்லை என்பது தெரியும். உதாரணமாக, தனிநாடு கேட்கும் தீவிரவாதத்தை ஒடுக்கும் அதே நேரத்தில், பயங்கரவாதத்திற்கான மூல காரணங்களை கண்டறிந்து அவற்றையும் களைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் இலங்கை இனப்பிரசினையை பயங்கரவாத பூதக்கண்ணாடி மூலமாக மட்டுமே பார்க்காமல், வரலாற்று நோக்கிலும் இந்த பிரச்சினையை பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறிவருகிறோம். பயங்கவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுகளை வீசி படுகொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ள நாடு உலகிலேயே இலங்கை ஒன்றுதான் என்பதையும் எடுத்துக்கூறி அதை எதிர்த்து வருகிறோம். இத்தகைய கருத்துகளுக்காக நாங்கள் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறோம். இது உண்மையிலேயே தேசவிரோதம் என்றால் அதை பெருமிதத்துடன் ஏற்கிறோம்.

சண்டே லீடர் பத்திரிகைக்கு அரசியல் நோக்கம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வதைவிட தீவிரமாக அரசை விமரிசனம் செய்வது ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேனை தவிர்த்து, பீல்டிங் பகுதியில் பந்து வீசுவதில்லையோ, அதேபோல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராகத்தான் தீவிரமாக விமர்சனங்களை வைக்க முடியும்: எதிர்கட்சிகள் மீதல்ல. கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்தபோதும், அந்த ஆட்சியின் அத்துமீறல்களை, ஊழல்களை வெளிக்கொணர்ந்து அன்றைய ஆட்சியின் தொண்டையில் சிக்கிய முள்ளாக நாங்கள் இருந்தோம். இத்தகைய எங்களின் போக்கும் அந்த ஆட்சி வீழ காரணமாக இருந்தது.

போரை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதற்காக நாங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை. உலகில் உள்ள மிகவும் இரக்கமற்ற - ரத்தவேட்கை கொண்ட இயக்கங்களில் ஒன்றாக அந்த இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கம் அழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவ்வாறு கூறுவதால், தமிழ் மக்களின் மனித உரிமைகளை பறிப்பதையும், அவர்கள் மீது இரக்கமற்று துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுமழை பொழிவதையும் ஏற்க முடியாது. ஏனெனில் அது தவறானது மட்டுமல்ல, புத்தரின் தம்மத்தை பாதுகாப்பதாக கூறும் நாம் வெட்கப்படவேண்டியதும் ஆகும். இத்தகைய அத்துமீறிய தாக்குதல்கள், செய்தித்தணிக்கை காரணமாக பொதுமக்களுக்கு உரியமுறையில் சென்று சேர்வதில்லை.

இதைவிட நாட்டின் வடக்கு-கிழக்குப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களின் சுயமரியாதையை இழந்து, நிரந்தரமாக இரண்டாம்தர குடிமக்களாக வசிக்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது. போர் முடிந்த பின்னர், அப்பகுதியில் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதன்மூலம் சீற்றத்தை தணிக்கமுடியும் என்று கனவு காணக்கூடாது. இந்தப்போரின் ரணங்கள் நிரந்தர வடுக்களை ஏற்படுத்திவிடும். இதன் விளைவாக தமிழ் மக்களிடம் மேலும் கசப்புணர்வும், வெறுப்புணர்வுமே ஏற்படும். அதை சமாளிப்பது எளிதல்ல. அரசியல் ரீதியாக தீர்வு காணக்கூடிய ஒரு பிரச்சனை, அனைத்து தரப்பு மக்களையும் துன்புறுத்தக்கூடிய சீழ்ப்பிடித்த கொடுங்காயமாக மாறிவிடும். நான் கோபமடைந்தும், சலிப்புற்றும் இருக்கிறேன் என்றால், எனது நாட்டு பெரும்பான்மை மக்களும் - முழு அரசும் - வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மையை பார்க்கத்தவறுவதால்தான்.

நான் இரண்டு முறை தாக்கப்பட்டதும், எனது வீடு துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டதும் அனைவருக்கும் தெரியும். இந்த சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்துவதாக அரசுத்தரப்பில் உறுதி அளிக்கப்பட்டாலும், இந்த தாக்குதல் குறித்த விசாரணை நடத்தி, இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த அனைத்து சம்பவங்களும் அரசின் தூண்டுதல் காரணமாகவே நடந்தது என்று நான் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. இறுதியில் நான் கொல்லப்பட்டால், அரசுதான் என்னை கொன்றிருக்க வேண்டும்.

இதில் துயரமான வேடிக்கை என்னவென்றால், நானும் மஹிந்தாவும் கடந்த கால்நூற்றாண்டாக நண்பர்களாக இருப்பது பொதுமக்களில் பலருக்கும் தெரியாது. அவரை அவரது முதல் பெயரான 'மஹிந்தா' என்ற பெயரிலும், சிங்கள மொழியில் அழைக்கும் 'ஓயா' என்று அவரை இன்றும் அழைக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவனாக இருப்பேன். அதிபர் மாதத்திற்கு ஒருமுறை பத்திரிகை ஆசிரியர்களை சந்திக்கும் கூட்டத்திற்கு நான் செல்வதில்லை. எனினும் சில பின்னிரவு நேரங்களில் தனியாகவோ, நெருங்கிய நண்பர்கள் சிலருடனோ அதிபரின் இல்லத்திலேயே சந்தித்து அரசியலைப்பற்றியும், பழைய இனிமையான நாட்களைப் பற்றியும் பேசுவதுண்டு. இந்த இடத்தில் சில குறிப்புகளை கூற விரும்புகிறேன்.

நண்பர் மஹிந்தா! கடந்த 2005ம் ஆண்டில் இலங்கை சுதந்திரக் கட்சியின் அதிபர் வேட்பாளராக நீங்கள் உருவெடுத்தபோது, எங்கள் பத்திரிகையைப்போல இதமான வரவேற்பு உங்களுக்கு வேறு எங்கும் கிடைக்கவில்லை. உண்மையில் உங்கள் முதல் பெயரை குறிப்பிடுவதன்மூலம் பல்லாண்டாக நடைமுறையில் இருந்த சம்பிரதாயங்களை உடைத்தோம். மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் மீது அப்போது நீங்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்காக உங்களை நாங்கள் வரவேற்றோம். ஆனால் 'ஹம்பன்டோடா'வுக்கு உதவும் முறைகேட்டில் நீங்கள் முட்டாள்தனமாக ஈடுபட்டபோது நாங்கள் கனத்த இதயத்தோடு அதை வெளியிட்டோம். மேலும் முறைகேடு செய்யப்பட்ட பணத்தை திருப்பி அளிக்கும்படியும் வலியுறுத்தினோம். அதை நீங்கள் பல வாரங்கள் கடந்து செய்தீர்கள். உங்கள் மீதான நன்மதிப்பில் மிகப்பெரும் தீயவிளைவை அது ஏற்படுத்தியது. அது உங்களை இன்றளவும் துரத்தி வருகிறது.

அதிபர் பதவி மீது உங்களுக்கு ஆர்வமில்லை என்று நீங்களே என்னிடம் கூறி இருக்கிறீர்கள். நீங்கள் அதிபர் பதவியைத்தேடி செல்லவில்லை: அப்பதவி தங்கள் மடியில் விழுந்தது. உங்கள் மகன்களே உங்களின் மகிழ்ச்சி என்றும், அரசு நிர்வாகத்தை உங்கள் சகோதரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, உங்கள் மகன்களோடு நேரத்தை செலவிடுவதே உங்களுக்கு விருப்பமானது என்றும் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது எனது மகனுக்கும், மகளுக்கும் தந்தை இல்லாது போகும் சூழலில் அரசு நிர்வாகத்தை செம்மையாக நடத்துவது யார் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது.

எனக்கு மரணம் ஏற்படும்போது, நீங்கள் வழக்கமான சடங்குச் சொற்களை கூறுவதோடு, முழுமையான விசாரணை செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் இதே போன்ற மற்ற சம்பவங்களில் நடந்ததைப்போல இந்த விசாரணையிலும் எந்த உண்மையும் வெளிவராது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உண்மையை சொன்னால், எனது மரணத்திற்கு பின்னால் யார் இருப்பார்கள் என்பது நாம் இருவருக்கும் தெரியும், அந்த பெயரை சொல்லும் துணிவு உங்களுக்கு இல்லாவிட்டாலும்கூட. ஏனெனில் என் வாழ்க்கையோடு, உங்கள் வாழ்க்கையும் அந்த உண்மையில் சிக்கியிருக்கிறது.

இலங்கை தேசம் குறித்து நீங்கள் இளமையில் கண்ட கனவுகள், நீங்கள் அதிபராக பதவியேற்ற இந்த மூன்று ஆண்டுகளில் உடைந்த செங்கற்களைப்போல தூள்தூளாகி விட்டது. தேசபக்தி என்ற பெயரில் மனித உரிமைகளை பறிப்பதிலும், ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கியதிலும், பொதுமக்களின் வரிப்பணத்தை சூறையாடியதிலும் மற்றெந்த அதிபரையும்விட நீங்களே மிஞ்சி இருக்கிறீர்கள். உண்மையை சொல்லப்போனால், பொம்மை கடையில் இறக்கிவிடப்பட்ட குழந்தையைப்போல நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால் அந்த உதாரணம்கூட உங்களுக்கு பொருந்தாது. ஏனெனில் நீங்கள் இந்த மண்ணில் ஏற்படுத்திய ரத்தக்கறையையும், குடிமக்களின் மனித உரிமைகளை பறித்ததையும்போல எந்த குழந்தையாலும் செய்ய முடியாது. நீங்கள் பதவி போதையில் மூழ்கி இருப்பதை உங்களால் உணரமுடியாது: இந்த போதை தலைக்கேறிய நிலையில் உங்கள் மகன்கள் இருப்பதை பார்த்து நீங்கள் வருந்தும் நிலை ஏற்படலாம். அது துயரத்தையை கொண்டுவரும். என்னைப் பொறுத்தவரை, தெளிவான மனநிலையில் என்னை படைத்தவனிடம் நான் செல்கிறேன். உங்களுக்கான நேரம் இறுதியாக வரும்போது, நீங்களும் அதையேசெய்வீர்கள் என்று நம்புகிறேன். அதை விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, நான் எந்த தனிமனிதனுக்கும் பணியாமல், தலை நிமிர்ந்து வாழ்ந்த நிறைவு இருக்கிறது. நான் இந்தப்பாதையில் தனியே பயணம் செய்யவில்லை. சக பத்திரிகையாளர்களும் என்னோடு பயணம் செய்துள்ளனர். அவர்களில் பலர் கொல்லப் பட்டுள்ளனர்: விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்: தூர தேசங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அதிபரான நீங்கள் முன்னொரு காலத்தில் எந்த பத்திரிகை சுதந்திரத்துக்காக பாடுபட்டீர்களோ, அதே பத்திரிகை சுதந்திரத்திற்காக தற்போது பாடுபடும் மேலும் சில பத்திரிகையாளர்கள் மரணத்தின் நிழலில் உள்ளனர். எனது மரணம் தங்கள் கண்காணிப்பின் கீழ் நிகழ்வதை நீங்கள் மறக்கவே முடியாது. எனது கொலையாளிகளை நீங்கள் பாதுகாப்பதைத்தவிர வேறு வாய்ப்பில்லாத நிலையில் நீங்கள் இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் எப்போதும் தண்டிக்கப்படாதவகையில் நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். உங்களுக்கு வேறு வழியே இல்லை. உங்களுக்காக நான் வருந்துகிறேன். உங்களை பதவியில் அமர்த்தியுள்ள உங்கள் குடும்பத்தினர், உங்கள் பாவங்களுக்காகவும் கடவுளிடம் நீண்ட நேரம் முழந்தாளிட்டு பாவமன்னிப்பு கேட்பார்கள்.

சண்டே லீடர் பத்திரிகையின் வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், எங்கள் பணியில் துணை நின்றதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையினரின் நலன்களுக்காக, குரல் எழுப்பக்கூட நாதியற்றவர்களுக்காக குரல் கொடுத்திருக்கிறோம். வேர்களை மறந்துவிட்டு தலை கொழுத்து திரிபவர்களின் ஊழல்களை வெளிப்படுத்தி உங்கள் வரிப்பணம் விரயமாக்கப்படுவதை அம்பலப்படுத்தி இருக்கிறோம். அரசுத்தரப்பில் கூறப்படும் பிரச்சாரங்களுக்கு மாற்றாக உண்மை நிலையை உணர்த்தி இருக்கிறோம். இதற்கான விலையை ஒரு நாள் கொடுக்க வேண்டும் என்று எனக்கு எப்போதும் தெரியும். அதனை நானும் - என் குடும்பத்தினரும் தற்போது கொடுக்கிறோம். நான் அதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறேன். இதனை தடுக்க நான் எதையும் செய்யவில்லை: முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ இல்லை. ஆயிரக்கணக்கான படுகொலைகளை கண்டிக்கும்போது மனித கேடயங்களின் பின் பதுங்கிக்கொள்ளும், எனது கொலையாளியைப்போல நான் கோழை இல்லை என்பதை அவன் உணர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது உயிர் யாரால் எப்படி கவரப்படும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அது எப்போது நடைபெறும் என்பதுதான் மீதமுள்ள கேள்வி.

சண்டே லீடர் பத்திரிகை தனது அறம் சார்ந்த யுத்தத்தை தொடர்ந்து நடத்தும் என்பதும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது. நான் இந்தப்பணியில் தனித்து செயல்படவில்லை. இந்த பத்திரிகை வீழ்த்தப்படுவதற்கு முன்னர் எங்களில் பலர் கொல்லப்படவேண்டும் - கொல்லப்படுவார்கள். அதுவரை சண்டே லீடர் பத்திரிகை மக்களுக்காக போராடும். எனது கொலை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக கருதப்படாமல், கருத்துரிமைக்காக தொடர்ந்து பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கான தூண்டுதலாக செயல்படும் என்று நம்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் எனது கொலை, இலங்கையில் மனித விடுதலைக்கான புதிய யுகத்தை படைப்பதற்காக போராடும் சக்திகளை இணைக்க உதவி செய்யும் என்றும் நம்புகிறேன். தேசபக்தியின் பெயரால் பல படுகொலைகள் நடந்தாலும், மனிதநேயம் மேலும் செழித்து வளரும் என்றும் அது அதிபரின் கண்களைத் திறக்கும் என்றும் நம்புகிறேன். எத்தனை ராஜபக்சேக்கள் சேர்ந்தாலும் மனிதநேயத்தை அழித்துவிட முடியாது.

நான் இத்தகைய ஆபத்தான முயற்சிகளில் இறங்க வேண்டுமா என்று பொதுமக்கள் பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். காலம் மாறும்போது இந்த அநீதிகளும் மாறிவிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனக்கும் அது தெரியும்: அது தவிர்க்கமுடியாததும்கூட. ஆனால் இப்போது நாம் பேசாவிட்டால், பின்னர் பேசுவதற்கு யாரும் மிஞ்சாமலே போய்விடக்கூடும். அவர்கள் சிறுபான்மையினராக, ஒடுக்கப்பட்டவர்களாக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.

ஜெர்மானிய மதத் தத்துவாதியாகிய மார்ட்டீன் நீய் மொல்லர் என்பவரின் வாழ்க்கை அனுபவமே எனது பத்திரிகை வாழ்க்கை முழுக்க எனது உந்து சக்தியாக செயல்பட்டு வந்தது. யூதர்களுக்கு எதிரான கருத்து கொண்ட இவர், இளமைக்காலத்தில் ஹிட்லரின் ஆதரவாளராக இருந்தார். ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் ஜெர்மனியை கைப்பற்றியவுடன், ஹிட்லரின் கொள்கை நாஜிக்களை மட்டுமே அழிப்பதல்ல என்பதையும், ஹிட்லருக்கு எதிரான கருத்து கொண்ட அனைவரையும் அழிப்பதே ஹிட்லரின் நோக்கம் என்பதையும் புரிந்து கொண்டார். ஹிட்லருக்கு எதிரான கருத்துகளைக்கூறிய மார்ட்டீன் நீய் மொல்லரும் நாஜிப்படையால் பிடிக்கப்பட்டு1937 முதல் 1945 வரை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்குமுன் எழுதிய கவிதையை நான் என் இளம்பருவத்தில் படித்தேன். என் நெஞ்சில் நிலைத்த அந்த கவிதை இதோ:

முதலில் அவர்கள் யூதர்களை பிடிக்க வந்தனர்.
நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதன் அல்ல.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளை பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை பிடிக்க வந்தனர். அப்போதும்
நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.
பின்னர் அவர்கள் என்னை பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.

நீங்கள் எதை மறந்தாலும் இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். சண்டே லீடர் பத்திரிகை உங்களுக்காக உள்ளது. நீங்கள் சிங்களராக, தமிழராக, இஸ்லாமியராக, தாழ்ந்த சாதியினராக, ஓரினப்புணர்ச்சியாளராக, எதிர்கருத்து கொண்டவராக அல்லது ஊனமுற்றவராக இருக்கலாம். உங்களுக்காக போராடுவதற்கு, அதிகாரத்திற்கு அடிபணியாமல் - அச்சமில்லாமல், தைரியமாக செயல்படுவதற்கு சண்டே லீடரின் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது வெறும் வார்த்தையல்ல. பத்திரிகையாளரான எங்கள் தியாகங்கள் எங்கள் பெயருக்கும், புகழுக்கும் செய்யப்பட்டதல்ல: அது உங்களுக்காக செய்யப்பட்டது. அந்த தியாகத்திற்கான தார்மீகத்தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பது வேறு விவகாரம். என்னைப்பொறுத்தவரை நான் அதற்கு முயற்சி செய்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.

Sunday, January 11, 2009

90.பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடக சங்கீதமா????

இசை !


இசைக்கு மயங்காதவர்கள் எவருமே இருக்கமுடியாது.உள்ளம் சோர்ந்திருக்கும் சமயங்களிலோ அல்லது கொண்டாட்டங்களைக் குறிக்குமுகமோ உடனடி வெளிப்பாடாக உள்ளம் நாடும் விதயங்களில் இசைக்கு முக்கியமான இடம் உண்டு.நமது பொழுதுபோக்கு ஊடகங்களில் கூட இசைக்கு முக்கியமான இடம் உண்டு;இசை இல்லாமல் அவை இருந்தால் ஒருவரும் அவற்றை ரசிக்க மாட்டார்.

இந்தியாவில் இசையின் வடிவங்கள் பல உண்டு.இன்றைய திரைஇசை மெல்லிசையாக இந்திய மற்றும் மேற்கத்திய இசைகளின் கலவையாக உருப் பெற்றிருக்கிறது.இந்தியாவில் நிலவும் இசை வடிவங்களில் பாரம்பரியமான இசை என்ற நோக்கில் பார்க்கும் போது வடஇந்தியாவில் இந்துஸ்தானி இசை மற்றும் கஸல் போன்றவை மற்றும் தென்னிந்தியாவில் கர்நாடக சங்கீதம் ஆகியவை தேறுகின்றன.

இந்த கர்நாடக இசைதான் பாரம்பரிய சங்கீதம் என்ற பொருளில் சாஸ்திரிய சங்கீதம் என்ற அடைமொழியுடன் உலவுகிறது.
அத்தகைய பாரம்பரிய இசையான கர்நாடக சங்கீதத்தின் அடிப்படைகள் எனப் பார்த்தால் சுரங்கள் எனப்படும் ஏழு ஸ்வரங்கள்,ராகங்கள் மற்றும் ராக ஆலாபனைகளின் வடிவமாக கீர்த்தனைகள் ஆகியவை கர்நாடக இசையின் பல கட்டுகளாக உள்ளன.இந்த கீர்த்தனைகள் பெரும்பாலும் தெலுங்கு மொழியில் அமைந்தவை.இந்த கர்நாடக இசையில் பெரும்பாலும் தேர்ச்சி அடைந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பாடகர்களும் பெரும்பாலும் பாடும் பாடல்களும் தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களே.

20’ம் நூற்றாண்டின் ஆரம்ப நிலை வரை இந்த நிலைதான் இருந்தது.தென்னிந்தியாவின் பாரம்பரிய இசையில் தமிழ்பாடல்களை பாடப்படாத நிலை கண்டு நொந்த சில பெரியவர்கள் தமிழிசை இயக்கம் என்ற இயக்கத்தையே தொடங்கி தமிழிசையை வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நிலவியது.அவர்களின் பெருமுயற்சியால்தான் இன்று சில பாடல்களாவது பாரம்பரிய இசை என சொல்லப்படும் கர்நாடக இசையில் தமிழ்ப்பாடல்களாக இருக்கின்றன.


தமிழர்கள் உலகின் முதலில் தோன்றிய நாகரிக இனங்கள் என்ற ஒரு பார்வை உண்டு;இன்னும் முழுக்க நாகரிக நிலையடைந்த முதல் மனித இனம் தமிழினமாகத்தான் இருக்க முடியும் என்ற கருத்தாக்கமும் வலுவுடன் இருப்பதற்கான சான்றுகளை நான் என்னுடை முந்தைய சில பதிவுகளில் வைத்தேன்.

இப்படிப்பட்ட பாரம்பரியத் தமிழினத்தில் இசைக்கான இடம் என்ன?தென்னிந்திய பாரம்பரிய இசையான கர்நாடக இசையில் ஏன் தமிழ்ப்பாடல்களுக்கான இடத்தைப் போராடிப் பெற வேண்டிய நிலை இருந்தது.இப்போதும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் இசை விழாக்களில் ஏன் தமிழ்பாடல்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கின்றன?

இப்போதைய இந்த கர்நாடக இசையின் ஊற்றுக்கண் என்ன?இப்போது கர்நாடக இசையின் வடிவங்கள் எனக் கருதப்படும் தெலுங்குக் கீர்த்தனைகளின் தோற்றம் எப்போது?அது தோன்றிய காலத்துக்கு முன் தமிழில் இசையின் வடிவங்கள் பாடல்கள் எவ்வாறு இருந்தன?

இந்த கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என தியாகராச சுவாமிகள்,முத்துஸ்வாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாத்திரிகள் என அறியப்படும் மூவர்.இவர்கள் கர்நாடக சங்கீதத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணமானவர்கள் எனப் போற்றப்படும் பெரியவர்கள்.இவர்களே அதிகமான கீர்த்தனைகள் என அறியப்படும் தெலுங்குப் பாடல்களை இயற்றியவர்கள்.

இவர்கள் சங்கீத மும்மூர்த்திகள் எனக் கொண்டாடப்படுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும்போது இவர்களின் காலத்திற்கு முன் சங்கீத உலகம் எப்படி இருந்தது என்ற தவிர்க்க இயலாத கேள்வி எழுகிறது.இந்தக் கேள்வி எழும்போதே இந்த மும்மூர்த்திகள் வாழந்த காலம் சுமார் 17ம் நூற்றாண்டு வாக்கில் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

அப்படியெனில் 17ம் நூற்றாண்டுக்கு முன் தென்னிந்தியாவின் பாரம்பரிய சங்கீதம் எப்படிப்பட்ட வடிவில் இருந்தது?

இன்று பாரம்பரிய சங்கீதம் என்று கர்நாடக சங்கீதப் பாடகர்கள் பெருமளவு தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடும் நிலையில்,இத்தகைய தெலுங்கு கீர்த்தனைகள் இயற்றப்பட்ட காலத்துக்கு முன் இசையின் வெளிப்பாட்டு வடிவமாக எந்தப் பாடல்கள் இருந்தன?

ஆழ்ந்த அகன்ற நெடிய இலக்கிய கால வரிசை கொண்ட தமிழில் இசைக்கான இடம் என்ன? அல்லது இசை என்னும் ஒரு அபூர்வக் கலையில் தமிழுக்கான இடம் என்ன?

கேள்விகள் ! கேள்விகள் ! இவற்றிற்கான் பதில்களை எப்போதாவது பெரும்பான்மைத் தமிழர்களான நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

சிறிது அலசுவோம்...

தமிழுக்கும் இசைக்குமான தொடர்பு:

தமிழ் என்னும் காலத்தினால் மூத்ததும் பயன்பாடு மற்றும் கருத்துச்செறிவில் என்றும் புத்திளமை கொண்டு இலங்கும் மொழியின் அகன்ற பகுப்பே இயல்,இசை,நாடகம் என்னும் மூன்றாக உள்ளது;எனவே தமிழ் என்னும் மொழியில் இசைக்கு ஆழ்ந்த ஒரு இடம் இருந்தது என்பது விளக்க வேண்டிய அவசியம் இன்றியே அனைவருக்கும் விளங்கும்.

தமிழின் இலக்கியப் புதையலில் ஆராயும்போது மிகத் தொடக்க காலத்து சான்றாக தமிழின் பரிபாடல் பற்றிய குறிப்பு கிடைக்கிறது.தொல்காப்பியத்தின் பொருளதிகாரச்செய்யுளின் 242ம் பாடலுக்கான உரையில் ‘அவையாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கந்தன என்பது’ என்ற குறிப்பால் பரிபாடல் என்பது இசைப்பாடல் வடிவத்தில் அமைந்த இலக்கியம் என்பது தெளிவாகிறது.மேலும் இதற்கான சான்றுக் குறிப்புகள் யாப்பருங்கலக்காரிகையிலும் காணக்கிடைக்கின்றன.

பரிபாடலில் நமக்குக் கிடைத்திருக்கும் 21 பாடல்களில் பாடல்களை இயற்றிய புலவர்கள் பெயரும் அப்பாட்டுக்குப் பண் வகுத்த புலவர்கள் பெயர்களும் இடம்பெற்றிருப்பதும் பரிபாடல் இசைப்பாடல்களால் அமைந்த நூல் என்பதற்கான் மேற்சான்றாகும்.இப்புலவர்களில் சிலரது பெயர்களாவன:பெட்டனாகனார்,கண்ணனாகனார்,நாகனார்,நன்னாகனார்,நல்லச்சுதனார் போன்றவை.

கடல் கொண்டு மறைந்த பழந்தமிழ் நாட்டின் பகுதிக்கு நாவலந்தேயம் மற்றும் நாகநாடு என்ற பெயர்கள் நிலவின என்பதும்,தமிழரில் பழங்காலத்தில் வாழ்ந்தவர்களில் நாகர்கள் என்ற ஒரு பிரிவினர் இருந்தனர் என்பதும் அவர்கள் இசைப்பயிற்சியில் தேர்ந்தவர்கள் என்பதும் இங்கு மீள்நினைந்து கொள்ளத்தக்கவை.

மேலும் இறையனார் அகப்பொருளுரை முதுநாரை,முதுகுருகு என்னும் இரு இசை நூல்களைப்பற்றியும் பேசுகிறது.

திருமுறைகளைச் சேர்ந்த தேவார திருவாசகப் பாடல்களுக்கு அக்காலத்தில் வாழ்ந்த பாணர்கள் என்னும் இசை வகுப்பினர் பண் மற்றும் இசை வகுத்த செய்திகளும் எல்லா திருமுறைப்பாடல்களுக்கும் அவை கொடுக்கப்பட்டிருப்பதும் அனைவரும் எண்ணிப்பார்த்து அறிய வேண்டுவது.

மேலும் பழந்தமிழ் இலக்கியம் மூலம் அறியப்படும் இசைக்கான சூத்திரங்கள் மற்றும் செய்திகளைச் சொல்லும் நூல்களில் சில:

சிற்றிசை
பேரிசை
பஞ்சபாரதீயம்
இசை நுணுக்கம்
பஞ்ச மரபு
பதினாறு படலம்
வாய்ப்பியம்
இந்திரகாளியம்
குலோத்துங்க சோழன் எழுதிய இசைநூல்
இசைத்தமிழ் செய்யுட்டுறைக் கோவை


போன்ற நூல்கள்..

இந்த நூல்கள் சொல்லும் செய்திகளில் காணக்கிடைக்கும் இசைத்தமிழ் பற்றிய செய்திகளாவன:

-இசை ஏழு வகைப்படும்.அவை குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம் என்பன.இவற்றின் வடமொழிப் பெயர்கள் மத்திமம்,பஞ்சமம்,தைவதம்,நிஷாதம்,ஷட்ஜம்,ரிஷபம்,காந்தாரம் என்பன.

-இசை பிறக்கும் இடங்கள்:மிடற்றினால் குரலும்,நாவினால் துத்தமும்,அண்ணத்தால் கைக்கிளையும்,சிரத்தால் உழையும்,நெற்றியால் இளியும்,நெஞ்சினால் விளரியும்,மூக்கால் தாரமும் பிறக்கும்.

இராகங்கள்:பைரவி,தேவக்கிரியை,மேகவிரஞ்சி,குறிஞ்சி,பூபாளம்,வேளாவளி,மலகரி,பௌளி,சீராகம்,இந்தோளம்,பல்லதி,சாவேரி,படமஞ்சரி,தேசி,இலலிதை,தோடி,வசந்தம்,இராமக்கிரியை,வராளி,கைசிகம்,மாளவி,நாராயணி,குண்டக்கிரியை,கூர்ச்சரி,பங்காளம்,தன்னியாசி,காம்போதி,கௌனி,நாட்டை,தேசாட்சரி,சாரங்கம் முதலியன

-இசை அல்லது இராகத்தின் பகுப்பு நான்கு கூறுகளின் மூலம் வகுக்கப்படும்.அவையாவன இடம்,செய்யுள்,குணம்,காலம் என்பன.
அதாவது இந்த நான்கு காரணிகளின் படி இராகங்கள் பகுக்கப்படலாம்.

-இடம்பற்றிய இராகங்கள் ஐந்தினை இராகங்கள்.அவை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை நிலங்களுக்குரிய குறிஞ்சி,சாதாரி,செவ்வழி,மருதம் மற்றும் பாலை என்பன

-செய்யுள் பற்றிய இராகவகைகள்:
வெண்பாவின் இராகம் சங்கராபரணம்
அகவற்பா அல்லது ஆசிரியப்பா:தோடி
கலிப்பா:பந்துவராளி
கலித்துறை:பைரவி
தாழிசை:தோடி
விருத்தம்:கலியாணி,காம்போதி,மத்தியமாவதி
பிள்ளைத்தமிழ்:கேதாரவுளம்
பரணி:கண்டாரவம்

-குணம் பற்றிய இராகவகைகள்:இரக்கம் உள்ளவை:ஆகரி,கண்டாரவம்,நீலாம்பரி,பியாகடம்,புன்னாகவராளி
துக்கம் உள்ளவை:மேற்கூறியவற்றோடு கூட வராளியும்
மகிழ்ச்சி:காம்போதி,சாவேரி,தன்யாசி
யுத்தம்:நாட்டை


-காலம் பற்றிய இராகவகைகள்:வசந்த காலம்:காம்போதி,அசாவேரி,தன்னியாசி
மாலை வேளை:கலியாணி,காபி,கன்னடம்,காம்போதி
யாமவேளை:ஆகரி
விடியற்காலை:இந்தோளம்,இராமகலி,தேசாட்சரி,நாட்டை,பூபாளம்
உச்சிவேளை:சாரங்கம்,தேசாட்சரி

ஆகரி,இந்தோளம்,இராமகலி,சாரங்கம்,பூபாளம் நீங்கிய இராகங்கள் எக்காலத்துக்கும் ஏற்றவை.

-இன்னும் வரும்

Monday, January 5, 2009

89.அவல நிலையிலா இருக்கிறது ஆசிரியர் சமூகம்


நிர்வாணமாக நின்ற ஆசிரியர்கள் என்ற தலைப்பில் நண்பர் சுரேஷ்கண்ணன் ஒரு பதிவு எழுதி இருந்தார்.விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியைப் பற்றிய ஒரு பார்வையாகவும் ஆசிரியர்களின் மீதான விமர்சனப் பார்வையுடனும் அமைந்தது அந்தப் பதிவு.

நீயா நானாவைத் தொடர்ந்த பார்ப்பினும்,பதிவைப் படித்தவுடன் தொடர்புடைய நிகழ்ச்சியின் பகுதியைத் தவற விடக் கூடாது என முடிவு செய்தேன்.

சிங்கையில் இந்த வார இறுதியில்தான் அந்த நிகழ்ச்சி வந்தது.இப்போது நிகழ்ச்சி முன்வைத்த கருத்துக்களோடு சுரேஷ் முன் வைத்திருக்கும் பார்வைகளுடனான ஒரு உரையாடல்...

******************


முதலில் நிகழ்ச்சியைப் பார்த்து முடித்த கணத்தில் எனக்குத் தோன்றிய உணர்ச்சி,கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் சில பகுதிகளுக்கு முன்முடிவுகளுடன் வருகிறாரோ என்ற என் சந்தேகம் மேலும் வலுவானதே.

இந்தப் பகுதியின் நிகழ்ச்சிக்கு வரும் போதே ஆசிரியர்களை ஒரு வழி செய்து விட வேண்டும் என்ற முடிவுடனே அவர் வந்திருந்தார் என நினைக்கிறேன்.இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்ல முடியும்.

இதே நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் பெற்றோர்கள் vs. பிள்ளைகள் பகுதி ஒரு நாளில் வந்தது.அதில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவு செய்ய, நடப்பு காலகட்டத்தில் பெற்றோர்களால் முடியவில்லை என்பது ஒரு குற்றமாக வைக்கப் பட்டது.அது ஒரளவுக்கு உண்மைதான்.

இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட ஒரு ஒரு டீன் ஏஜ் பெண்ணின் பெற்றோர் “தங்கள் குழந்தைகளின் நல்ல எதிர்காலம் கருதியே நாங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது” என்று சொன்னபோது அந்த மகள் “இன்னைக்கு வாழ்க்கையைப் பாருங்க,நாளைக்கு என்ன ஆகும்னு யாருக்கும் தெரியாது.இன்னைக்கு நான் சந்தோஷமா இல்லை,அது இல்லாமல் உங்க காசை வச்சு என்ன செய்றது” என்ற கேட்டாள்.

அந்தப் பெண்ணின் கேள்வியும்,அதைவிட அந்தக் கேள்வியின் குரலில் இருந்த ஆங்காரமும் என்னைத் தாக்கியது.சொல்லத் தேவையன்றி கோபிநாத் அந்தப் பெண்ணின் கேள்விக்கு மேலுறுதி சேர்த்து,பெற்றோரைக் ‘கண்டித்து’ அவர்களுக்கு ‘புத்திசொல்லி’ நிகழ்ச்சியை முடித்தார்.

இதில் எழும் எனது கேள்விகள்:


##ஒரு பெற்றோரை விட குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவோர் யாராக இருக்க முடியும்?

##அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிட இயலவில்லை என்பது,இப்படி ஒரு பொது நிகழ்ச்சியில் பெற்றொரைக் கூனிக் குறுக வைக்க வேண்டிய அளவுக்கு அந்தப் பெற்றொர் மகளுக்கு இழைத்த கொடும் குற்றச்செயலா?

##தன் பெற்றோரின் மீது,அதுவும் தன் குழந்தைகள் எதிர்காலத்தில் அவர்கள் விரும்பிய விதயங்களைச் செய்ய வேண்டும்,விரும்பிய படிப்பைப் படிக்க வேண்டும்,விரும்பிய தொழிலைச் செய்ய வேண்டும் என்ற காரணம் பற்றி உழைக்கும் தன் பெற்றோரின் மீது இவ்வளவு ஆங்காரம் காட்டும் ஒரு பெண்,நாளை சமூகத்தில் ஒரு பொதுமனிதன்,தான் நினைத்த படி அந்த நபர் செயல்படவில்லையென்றால்,அந்த மனிதனின் மீது எவ்வளவு ஆங்காரம் காண்பிப்பாள்?

##இத்தகைய மனோபாவப் பெண்கள் எப்படி தன் கணவன்,மாமியார் போன்ற புது சொந்தங்களுடன் ஒன்ற முடியும்?

அந்த நிகழ்ச்சியிலும் கோபிநாத் முன்முடிவுடனே வந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது.

* * *


இப்போது ஆசிரியர்கள் பற்றிய எபிசோடுக்கு வருவோம்.

சிறப்பு விருந்தினர்கள் பற்றி ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது அடுத்த குற்றப் பத்திரிகை.

என் கேள்வி:தெரிந்திருக்காதது ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை எவ்விதம் பாதிக்கிறது?

பேராசிரியர் கல்யாணியைப் பற்றித் தெரிந்திருக்க அவர் செய்தித்தாளில் தினமும் இடமும்,படமும் இடம்பிடிக்கும் ஒரு பொதுமுகம் அல்ல.வீரப்பன் எபிசோடில் அவர் இடம் பிடித்திருந்தார் எனினும் அவரைப் பற்றி முக அறிமுகம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஒன்றிரண்டு பத்திரிகைகள் தவிர் அந்த சமயத்தில் வந்த அனைத்து பத்திரிகைகளும் கோபால் முகத்தைத்தான் ஃபிளாஷ் செய்தன.கல்யாணியின் பெயர் வந்ததேயொழிய,புகைப்படம் அனைத்திலும் வந்ததாக நினைவில்லை.

* * *


இன்னொரு காமெடி நடந்தது.
பேராசிரியர் கல்யாணி தன்னுடைய ஆசிரியர் தன்னைப் பெஞ்சுமேல் ஏறி நிற்கச் சொன்னார் என்பதற்காக சுமார் 50 வருடங்கள் கழித்து நிகழ்ச்சியில் வந்து கண்கலங்கினார்;அவரை கோபிநாத் தேற்றினார்.

என்னங்கய்யா நடக்குது? இவ்வளவு காமெடி நாடகம் நடத்துறீங்க ....

ஆசிரியர்கள் தண்டிப்பது என்பது மாணவர்களின் குறைகளைக களையும் நோக்கிலேயே.சுமார் 20 வருடங்களுக்கு முன் பள்ளிகளில் ஆசிரியர்கள் படிக்காத அல்லது அடம் செய்யும் மாணவர்களைத் தண்டிக்க பிரம்பு அல்லது குச்சியால் (பெரும்பாலும் பின்பக்கம் புட்டத்தில்) அடிப்பார்கள்;அல்லது உள்ளங்கைகளில்,கையை விரிக்கச் சொல்லி அடிப்பார்கள்.இது தீவிரத் தவறு செய்யும் மாணவர்களுக்கு மட்டும்.
சாதாரணத் தண்டனைகள் முட்டி போடச் சொல்லுதல் அல்லது இம்போசிஷன்(இதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?) கொடுப்பார்கள்.

இவை மாணவர்களை நெறிப்படுத்தும் பொருட்டு அளிக்கப் படும் தண்டனைகள்.சுமார் 20 வருடம் முன்பு வரை இதற்காக பெற்றோரோ,மற்ற உறவினரோ ஆசிரியர்களிடம்,ஏன் பையனை அடித்தாய் எனச் சண்டைக்குப் போவதும் கிடையாது.

வீட்டில் வந்து ஆசிரியர் அடித்து விட்டார் என்று சொன்னால் நீ என்ன தவறு செய்தாய் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் முதல் கேள்வியாக இருக்கும்.

இன்னும் சொல்லப் போனால் வீட்டில் ஏதாவது குறும்பு செய்தால் கூட,வாத்தியாரிடம் சொல்லி விடுவேன் என்று பயமுறுத்தி குழந்தைகளை பெற்றோர்கள் அக்காலங்களில் நெறிப்படுத்த முடிந்தது.

இது போன்ற சூழலில் வளர்ந்த மாணவர்கள் நல்ல முறையிலேயே வளர்ந்தார்கள்,நான் உள்பட!

தவறு செய்தால் அதற்குரிய தண்டனை கிடைக்கும் என்ற நீதியும்,தவறு செய்யும் மனநிலைக்கெதிரான தடையாகவும்-டிட்டரெண்ட்-அந்த தண்டனைகள் விளங்கின.அதற்காக தனத்திற்கு ஒரு மனநோயாளி ஆசிரியர் அளித்த தண்டனைகள் போன்ற தண்டனைகளை நான் நியாயப்படுத்தவில்லை.சிறார்களின் பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர்கள்,அவர்களின் கற்பித்தல் மற்றும் தண்டனைபயம் ஆகியவை மாணவப் பருவத்தை செதுக்கும் நல்ல காரணிகளாகவே பெரும்பாலும் கையாண்டார்கள்.இதன் மூலம் மாணவர்கள் நல்ல சமூகத்தின் அங்கமாக மாறுவதற்கான சரியான ஆயத்தங்களை அந்த ஆசிரியர்கள் ஏற்படுத்தினார்கள் எனலாம்.

இந்த விதமான மாணவப் பருவத்தை செதுக்கிய என்னுடைய சிறுவயது ஆசிரியர்களை இன்றளவும் என்னால் நன்றியுடன் நினைத்து சிலாகிக்க முடிகிறது.

இத்தகைய ஒரு தண்டிப்பை சுமார் 50 வருடம் கழித்து விசித்து அழும் அளவுக்கு ஒரு கடின நிகழ்வாக ஏற்றுக் கொண்ட கோபிநாத் இன்னொரு பொருந்தாத கேள்வியைக் கேட்டார்.

ஒரு மாணவர்,மாணவர்கள் ஆசிரியர் சரியாகக் கற்பிபக்கும் திறனுடன் இல்லாதநிலை பற்றிக் குறிப்பிடும் போது, it’s his job என்று சொன்ன போது,அதைப் பிடித்துக் கொண்டு தொங்கிய கோபிநாத் “எங்கள் காலங்களில் இப்படி ஆசிரியரைப் பற்றிய மனோபாவம் இல்லை;நீங்கள் ஆசிரியரை ஒரு பணம் கொடுத்து அமர்த்திய வேலைக்காரனைப் போல் பார்க்கிறீர்கள்:நாங்கள் எங்கள் காலத்தில் அவர்களைக் குருவாகப் பார்த்தோம்.....” என்று அங்கலாய்த்தார்.

இப்படி மாணவர்கள் ஆசிரியரைக் குருவாகப் பார்க்கவில்லை என அங்கலாய்ப்பதும்,கண்டித்த ஆசிரியரின் செயலை குற்றச் செயலாக விமர்சித்த பாங்கும் ஒன்றுக்கொன்று முரணான இரு செயல்கள்.

நல்வழிப்படுத்தும் கடமையில்லாத,கண்டிக்கும் அதிகாரம் அற்ற,’குரு’வாக இருக்க முடியாத ஒரு ஆசிரியரை மாணவர்,it’s his job என்ற அளவில்தான் பார்ப்பார்!

அந்த மாணவனின் மாறிய மனநிலைக்கு என்ன காரணம்?

மேற்சொன்ன எல்லாமே காரணம்.

ஆசிரியர் என்பவர் மாணவர்களை நல்வழிப் படுத்தும் பொருட்டு கூட கண்டிக்கக் கூடாது என்ற மனநிலை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வந்து விட்ட சூழலில் கற்பிக்கும் பணி என்பது ஒரு consuming item என்ற அளவிலேயே பார்க்கப்படுகிறது;எனவேதான் I am paying money;I expect the relevant job content என்ற மனோபாவம் வந்தது.ஆசிரியர்களும் character building,human shaping போன்ற கடமைகளிலிருந்த தம்மை விடுவித்துக் கொண்டு விட்டார்கள்.

நாம் இக்காலங்களில் பொதுவாக பெரியவர்களை நடத்த வேண்டிய முறையில் குழந்தைகளையும்,குழந்தைகளை நடத்த வேண்டிய முறையில் பெரியவர்களையும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

கண்டித்து திருத்தி வளர்க்க வேண்டிய குழந்தைகளை செல்லம் கொடுத்து வளர்க்கிறேன் என்ற பெயரில் வாங்க,போங்க எனப் பெரியவர்கள் போல நடத்தி சமூகத்திலும் அவ்வித சீராட்டல்களுக்கான எதிர்பார்ப்பைக் குழந்தைகளிடம் விதைக்கிறோம்.மரியாதை சொல்லிக் கொடுத்து வளர்ப்பதற்கும் இவ்வித போலி சீராட்டல்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது.

மறுபுறம் கவனமாக கண்ணாடிப் பாத்திரம் போல சீராட்டிப் பேண வேண்டிய பெரியவர்களை,பெற்றோரை சிறார்களை நடத்துவதைப் போல ஹாஸ்டல்களில் கொண்டு விடுகிறோம்.

இவ்வித மாறுபட்ட நம்முடைய குணமாறுதல்களால்தான் ஆசிரியர்களும் மாறிப் போனார்கள்....

* * *


கடைசியாகப் படித்த புத்ததகம் என்ன என்பதற்கும்,புக்கர் பரிசு பெற்ற நூலை எழுதிய ஆசிரியர் யார் என்பதற்கும் ஆசிரியர்கள் பதிலளிக்க இயலவில்லை என்பதும் அடுத்த குற்றம்.

இது ஒரு குறை என்பதில் மாற்றுக் கருத்தில்லை;ஆனால் இது ஆசிரியராக இருக்கத் தகுதியல்லாத அளவுக்க ஒரு குற்றம் அல்ல.

தனது பாடம் சார்ந்த,துறை சார்ந்த விதயங்களில் ஆசிரியர்கள் விவரங்களை விரல் நுனியில் வைத்திருத்தலும்,அனைத்து மாணவர்களையும் புரிந்து கொள்ளச் செய்யும் கற்பிக்கும் திறனும் ஆசிரியர்களுக்கு இருந்தால் இந்திய சூழலில் அது யதேஷ்டம்.

ஆசிரியர்கள் அவ்விதம் துறை மீறிய அறிவுடன் இருந்தால் அது nice to have அம்சம் என்பதை மறுப்பதற்கில்லை;ஆனால் just பாடத்தை தெளிவாக நடத்தினாலே ஆசிரியர்கள் ஒரு நல்ல அடித்தளத்தை மாணவர்களுக்க அளிப்பார்கள் என்பதுதான் யதார்த்தமான உண்மை.

சிகரமாக இன்னொரு விநோதம் !

அவ்வாறு எந்த துறைமீறிய சிறப்பறிவும் அறியாத ஆசிரியர்களில் சிலரைத்தான் அதே மாணவர்கள்,ஆசிரியர்களின் பாடங்கள் கற்பிக்கும் திறனுக்காக சிலாகித்துப் பாராட்டியதும் 1000 க்கு 1000 மதிப்பெண்கள் வழங்கியதும் அதே நிகழ்ச்சியில்தான் நடந்தது !

88.எது வீரம்,தண்டிப்பதா அல்லது மன்னிப்பதா ?

To End All Wars




டேவிட் கன்னிங்ஹாம் எடுத்த இந்தப் படம் இரண்டாம் உலகப் போர்கள் பற்றிய வரிசைகளில் வந்த ஒரு படம்.(2001)

போர்க் கைதிகளாக ஜப்பானியர்களிடம் நேசப் படையினரின் ஒர் குழு மாட்டுகிறது.அவர்கள் பல வகையான சித்ரவதைகளுக்கும் மனிதத் தன்மையற்ற வகையிலும் ஜப்பானியத் தளபதியினால் நடத்தப் படுகிறார்கள்;அவ்வப்போது கொல்லவும் படுகிறார்கள்.

ஜப்பானியப் படையில் இருக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளர் தகாசி நகாசே மற்றும் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் அணியின் கேப்டன் எர்ன்ஸ்ட் கார்டன் பார்வையிலும் பெருமளவு காட்சிகள் விரிகின்றன.
கார்டன் முதலில் எழுதிய புத்தகத்தைத் தழுவியதுதான் இந்தப் படம்.


இடையில் அவர்களை வைத்து தாய்லாந்துப் பகுதியின் ஒரு புகை வண்டி நிலையம் சீரமைக்கப் பட ஆணையிடப்படுகிறது;போர்க்கைதிகளை நடத்த வேண்டிய ஜெனீவா ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டும் நேசப்படையின் தளபதி நெற்றியில் துப்பாக்கி வைத்து சுடப்படுகிறார்;சரியான உணவற்று மிருகங்களைப் போல் நடத்தப் படும் அவர்கள் நேசப்படை போரை வெல்வதால் மீட்புக் குழுவால் மீட்கப் படுகிறார்கள்;மீட்கப் படும் நேரத்தில் மீட்க வந்த அணியின் வீரர் தன் நண்பர்கள் இருந்த நிலையைப் பார்த்து இறுகிப் போன முகத்துடன் ஜப்பானியப் படை அணியும் வீரர்களும் எங்கே எனக் சிறைப்பட்டிருந்த தன் நண்பர் குழுவின் துணைத்தளபதியிடம் கேட்கிறார்;ஒரு குரூரமான பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்பார்க்கையில் இறுதிக் காட்சி வித்தியாசமான முறையில் விரிகிறது.

நகாசியும் கார்டனும் தோழமையோடு வீரர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் அவர்களுக்கு மரியாதை செய்யும் காட்சியுடன் முடிகிறது படம்.

ஜப்பானிய தளபதிகள் இரண்டாம் உலகப் போரில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை ஓரளவு விவரிக்கிறது இப்படம். ஜப்பானியத் தளபதி நோகுச்சியின் பாத்திரத்தை செய்த நடிகரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.


இப்படத்தின் அடிநாதம் எதிரிகளிடம்,குறிப்பாக் தம்மை மிக மோசமான முறையில் சித்ரவதைப்படுத்திய மனிதர்களை மன்னிப்பதில் இருக்கும் வீரம் தண்டிப்பதில் இருக்கிறதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.

ஆனால் இப்படத்தின் இறுதிக்காட்சியைப் போல அமெரிக்க,பிரிட்டிஷ் படைகள் நடந்து கொண்டனவா என்பது கேள்விக்குரிய விதயமே....


மெல்லச் செல்லும் இந்தப் படம் பல ஹாலிவுட் படங்களைப் போன்ற விறுவிறுப்புடன் செல்கிறது எனச் சொல்லமுடியாது;ஆனால் மனத்தைத் தொடும் சில காட்சிகள் போரை நேரடியாக அனுபவிக்காத நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பதைச் சொல்லும்.

இந்தப் படம் பெரும்பாலும் உண்மைகளின் அடிப்படையில் எடுக்கப் பட்ட படமே. மிகக் குறைந்த செலவிலேயே இந்தப் படம் எடுக்கப் பட்டிருக்கலாம்;ஆனால் நெகிழ வைக்கிறது.

மற்ற போர்க்கைதிகளின் சித்ரவதைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தின் ஹை லைட் ஜப்பானியர்கள் போர்க்கைதிகளை ஒரு புகைவண்டி நிலையத்தை சீரமைப்பதில் ஈடுபடுத்தினார்கள் என்பதை ஒரு முக்கிய குற்றச்சாட்டாக பார்வையாளனின் முன் வைக்கிறது.

போர்க் கைதிகளுக்கான ஜெனீவா பிரகடனத்தின் படி இவை தவறு என்றாலும் இதன் மூலம் விரிந்த என் எண்ணங்கள் கிட்டத்தட்ட இதே கால கட்டத்தில் நடந்த சயாம் ரயில் பாதை அமைப்பு பற்றிய நிகழ்வுகளையும் அதன் ஊடான கண்ணீரும் ரத்தமுமான ஆயிரக்கணக்கான தமிழர்களின் சாவுக்கதைகளைப் பற்றியும் சென்றன.

ஒரு மலேசிய,சிங்கை எழுத்தாளர் ‘சயாம் மரண ரயில்’ என்ற தலைப்பிலேயே ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யை சிலாகிக்கும் அன்பர்கள் இதையும் படிக்க வேண்டும் !

ரம்பாக்களின் தொடைகளையும்,த்ரிஷா\ஷ்ரேயாக்களின் குட்டைப் பாவாடைகளையும் கச்சைகளையும் மீறி, தமிழர்களின் அந்த சோகங்கள் பற்றிய ஆவணப்படம் ஏதாவது தமிழில் எடுக்கப்பட்டிருக்கிறதா?
இந்திய விடுதலைப் போராட்டங்களைப் பற்றியே லகான் மற்றும் மங்கள் பாண்டே போன்ற படங்களைத் தவிர வேறு வித்தியாசமான நல்ல படங்கள் வந்திருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான்.சிறைச்சாலை ஒரு விதிவிலக்கு !

இவை போன்ற முயற்சிகள் அறவே இல்லாத தமிழ் சினிமாக்கள நாயகர்கள் இல்லாத மதச்சண்டை பற்றிய குப்பைகளை மிகுந்த ஆரவாரப்படுத்தி எடுத்து விட்டு,ஆஸ்கார் பற்றிப் பேசுவதையெல்லாம் பார்க்கும் போது சிரிப்பு வருவதைத் தவிர்க்க இயலவில்லை!

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...