குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Saturday, February 28, 2009

96.வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை !!!???


வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை !
என்ன தலைப்பு விவகாரமாக இருக்கிறதே என்று ஆசிரியர் பெருமக்களும் அவர்கள் வாரிசுகளும் சண்டைக்கு வர வாய்ப்பிருக்கிறது !
நடைமுறை நிலவரத்திலும் சிலசமயம் இவை உண்மைதானோ என்று தோன்றும்.விளக்குகிறேன்...
80 களின் மத்தியில் நான் ப்ளஸ் டூ என்னும் மேல்நிலைக் கல்வி கற்ற காலத்தில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் முதல் இரண்டாம் குழுப்(அறிவியல் மற்றும் மருத்துவம்) படிப்புக்கு விண்ணப்பித்து மேல்நிலைக்கல்வியில் சேர்ந்தார்கள்;அதற்கு அடுத்த நிலையில் 300 லிருந்து 350 க்குள் மதிப்பெண் பெற்றவர்கள் வணிகவியல் மற்றும் தொழிற்கல்வியில் சேர்ந்தார்கள்;அதற்கும் கீழ்நிலையான மதிப்பெண்களை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுத்தவர்களில் பலர் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்தார்கள்.
என் நினைவில் நல்ல மதிப்பெண் பெற்ற எந்த மாணவரும் ஆசிரியர் பயிற்சியில் விருப்ப முறையில் சேர்ந்ததாக நினைவில்லை;மற்ற எதிலும் வாய்ப்பில்லாத மாணவர்கள் ஆசிரியர் பயிற்சியை ஒரு கடைசி வாய்ப்பாகத்தான் பார்த்தார்கள்.
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்பவர்கள் அனைவரும் இவ்வாறு குறைந்த மதிப்பெண் பெற்றவர்களே என்று அறுதியிட்டு பொதுக்கருத்தாக இதை வலியுறுத்த முடியாது என்றாலும் நான் காட்டிய சூழல் பெரும்பாலும் இருந்ததை மறுக்க முடியாது.

எனவே மேற்கூறிய பழமொழி உண்மைதானோ?
அதற்கு அடுத்த சொற்றொடருக்கும் இந்த மாதிரிப் பொருள் விரித்து அலசினால் என் மேல் கஞ்சா(பொய்)வழக்குப் பாய்ந்தாலும் வியப்படைய முடியாது.
அது போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை!

0 0 0
உண்மையில் இந்த இரண்டு சொலவடைகள்-வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை;போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை- குறிப்பது என்ன?
இன்றைய நாட்டு சமூக நிலை நாம் பார்த்த அலசிய இந்தப் பொதுப் பொருளுக்கு மிகவும் அருகில் வந்து விட்டாலும்,இவற்றின் உண்மையான பொருள் அது அல்ல.
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்பதன் உண்மை வடிவம், வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதே.
அதாவது வாக்கு என்ற சொல் கல்வித் திறன்,சொல் திறம் ஆகியவற்றைக் குறிக்கும் சொல்.வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் என்ற ஔவையின் பாடலும் கல்வித்திறனை முன்வைத்தே சொல்லும்.இன்னும் சொல்லப் போனால் வாக்கும் சொல்திறமும் வாழ்வில் வெற்றி பெற விழையும் எந்த ஒரு மனிதனுக்கும் முக்கியமான திறன்.
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது என்றார் நாவலர்.உலகத்தையே வெல்லும் திறன்களைப் பெற விழையும் ஒருவன் பெற வேண்டிய திறன்களில் ஒன்றான சொலல் வல்லான் என்ற சொல் குறிப்பிடும் வாக்குத்திறம் பெற்ற,அனைத்திலும் வெற்றி பெறத்தக்க அறிவுத்திறம் நிரம்பிய மக்கள் ஆசிரியப் பணியில் இருக்க வேண்டும் என்ற ஆவல் பற்றி எழுந்தது அந்த சொலவடை.அப்படிப் பட்ட ஆசிரியர்கள் இருக்கும் போது மாணவர்கள் அவரைப் பின்பற்றுவதோடு அவரை முன்மாதிரியாகக் கொண்டு நற்திறன்களை வளர்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் பற்றியே அறிவுறுத்தினார்கள் நம் முன்னோர்- வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை.
இதேபோல் போக்கத்தவனுக்கு போலீஸ் வேலையின் திருந்திய வடிவம் போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை என்பதுதான்.
அதாவது ஒரு குற்றம் நடந்த போதோ அல்லது குற்றம் நடக்கலாம் என்று சூழல் இருக்கும் போதே கூட நடக்கும் நிகழ்வுகளை எடை போட்டு அவற்றின் போக்கு-விளைவை முன்னரே அறியும் திறன் பெற்றவர்கள் காவல்பணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது உண்மைப் பொருள்!
பழமொழிகளிலும்,சொலவடைகளிலும் இருக்கும் மறை பொருள்கள் சிந்திக்க வைப்பவை.இன்னும் சொல்லப் போனால் அவற்றைத் சிதைத்து அவற்றின் கொச்சை வழக்கிற்கு வேறு பொருள் வருமாறு செய்து விட்ட குறை,நம்முடைய குறை....
ஆனால் அந்தவகையான சிதைந்த சொலவடைகள் தரும் பொருளே உண்மை நிலவரம் என்ற அளவுக்கு சமூகமும் பல காரணிகளால் நீர்த்துப் போய் விட்டது என்பதும் யோசித்து வருந்த வேண்டிய விதயம்!

Tuesday, February 24, 2009

95.தமிழன் : சாதனைச் சிகரமும்,வேதனை அவலமும்





தமிழனுக்கு ஒரு ஆஸ்கர் பரிசு கிடைப்பது எக்காலம் என்று பல காலம் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது போல இருந்த சூழல்தான் இதுவரை இருந்தது.





ஆஸ்கர் வெல்லப்பட்டால் கமலஹாசன்,மணிரத்னம் மற்றும் சங்கர் போன்றோர்தான் எப்போதாவது அதை சாதிக்க முடியும் என்று பரவலான ஒரு எண்ணமும் எதிர்பார்ப்பும் இருந்தது.ஆனால் இனிய ஒரு தென்றல் போல,மின்னும் மின்னல் வீச்சைப் போல,ஒளிர்ந்து மிளிரும் வாள்வீச்சின் கூர் போல சட சடவென கோல்டன் குளோப்,பாஃப்டா,ஆஸ்கர் என்று ஒரே வீச்சில் விருதுகளை அள்ளிக் குவித்திருக்கிறார் ரகுமான் என்ற திலீப்குமார்.அதுவும் ஒன்றுக்கு இரண்டாக !



Slum dog Millionaire என்ற அந்தப் படத்தின் மையக்கருத்து ஒரு சாதாரணன் கோடீஸ்வர ஜாக்பாட் அடித்த சம்பவத்தை விவரிக்கும் விவரணத்தைச் சொல்லும் படமென்றாலும் அதன் பின்னணிக் கதை இந்தியாவின்,மும்பையின் ஏழ்மை வாழ்வின் அவலங்களை,அவற்றின் அவல மற்றும் கேவலப் பார்வையுடன் முன்வைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.அந்தப் படம் சொன்ன உள்ளார்ந்த செய்தியை என்னால் சிலாகித்துப் பாராட்ட முடியவில்லை,அது உண்மையாக இருந்த போதிலும்! ஒரு பார்வையாளனின் பார்வையோடு சேர்க்கப்பட்ட ஏழமை வாழ்வு மற்றும் மும்பை வாழ்வின் கலவரங்கள் சார்ந்த ஒரு எள்ளலும் அந்தப் படத்தின் சம்பவங்களில் மறைந்திருந்தது.சொல்லப் போனால் அமெரிக்க நிலவரத்தில்,வாழ்வியலில் இந்தப் படத்திற்கு கிடைத்த அதீத வெளிச்சத்தின் பின்னணி,இந்தியாவின் அவலத்தின் மீது வெளிச்சமடிக்கும் வெள்ளைத் தோலின் ஆர்வமே காரணமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.



இந்தப்படம் சார்ந்த தி சண்டே இந்தியன் பத்திரிகையின் ஆசிரியர் எழுதும் வலைப்பக்கத்தில்-Passionate About India- இந்தப் படம் சார்ந்த பதிவு, இந்த வெள்ளை மனோபாவத்தின் நீள அகல ஆழங்களை சரியான பார்வையில் முன் வைக்கிறது.அந்தப் பதிவின் பல பார்வைகளுடன் நான் ஒத்துப் போகிறேன்.



ஆனால் இவை எல்லாம் இந்தப் படத்தின் ஆன்மாவைப் பற்றியவை.



இந்த எல்லாவற்றின் மத்தியிலும் ஒரு படமாக சமீப காலங்களில் நான் பார்த்த படங்களில் எடிட்டிங்,ஒளிக்கோர்வை,இயக்கம் ஆகியவற்றில் இந்தப்படத்தின் ஆக்க நேர்த்தி வியக்க வைத்த ஒன்று.நான் பார்க்கக் கிடைத்த இணையப் பிரதியிலும் கூட படத்தின் தெளிவும் மற்ற மேற்கூறிய நேர்த்தியும் பாராட்ட வைத்தது உண்மை.



ரகுமானைப் பொறுத்தவரை அவரது இசை subtle ஆக படத்தின் கதையோடு கூடவே இழைந்து சென்றது என்று தாராளமாகச்சொல்லலாம்.சிலர் இசை தனித்துக் கொண்டாடும் அளவுக்கு இல்லை என்று கருத்தளித்தார்கள்.தனித்துத் தெரியாத அந்த இசைதான் ரகுமான் இந்தக் கதைக்கு அளித்த பலம் என்று எனக்குப் படுகிறது.அந்தக் கடைசிப் பாட்டு ஒரு கொண்டாட்டம்.





எனவே எதிர் பார்த்த படி இசைக்கோர்வை மற்றும் அந்தக் கடைசிப்பாடல் இரண்டிலும் விருது வென்றிருக்கிறது.ரகுமான் பாராட்டப் படவும் கொண்டாடப்படவும் வேண்டியவர்.





பாராட்டுக்கள் சக தமிழா!





ஆனால் ஒரு படமாக அவருடைய ரங் தே பசந்தி மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் படங்கள் மேலும் நெகிழ்வூட்டியவை என்பதையும் இங்கே சொல்லி வைக்கிறேன்.





மேலும் இந்த நேரத்தில் ஆஸ்கர் ஆஸ்கர் என்று சுமார் 10,20 ஆண்டுகளாகப் பீலா விட்டுக்கொண்டிருக்கும் கமலஹாசன் வகையறாக்கள் ஒரு படத்தின் ஆக்க நேர்த்தி சார்ந்த விதயங்களில் பார்த்து திருத்திக் கொள்ள வேண்டிய வகையான படம் Slum dog Millionaire.தசாவதாரம் போன்ற படங்களுக்கெல்லாம் ஆஸ்கர் கிடைக்கும் என்ற,அந்தப் படம் வெளிவந்த நேர ஊடகப் பீலாவை நினைக்கையில் சிரிப்பு பீரிடுகிறது.







0 0 0





ஹரனின் இந்தக் கருத்துப் படம் சொல்வதை விட இலங்கை நிகழ்வுகளை வார்த்தைகள் விவரித்து விட முடியாது.






அங்கு நிகழும் செயல்களைப் பார்த்தால் மனம் பதறுகிறது.மன அதிர்ச்சிக்கும் அவலத்திற்கும் விளிக்கப் படவேண்டிய எல்லா சொற்களையும் தாண்டிய அவலத்தைப் பிரதிபலிக்கிறது இலங்கைத் தமிழர்களின் நிலை.வாருங்கள்,பாதுகாப்பு தருகிறோம் என்று கூப்பிட்டு பாஸ்பரஸ் குண்டுகளை வீசி அவர்களை அழிக்கும் ஒரு அரசை என்னவென்று வகைப்படுத்துவது என்று தெரியவில்லை.








கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட எண்ணற்ற இளைஞர்களின் பிணங்கள் வன்னி,புதுக் குடியிருப்பு பகுதிகளில் கேட்பாரற்றுக் கிடப்பதாக ஐநா சார்ந்த ஊடகவியலாளர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.





விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள்,ராஜீவைக் கொன்றார்கள் போன்ற பார்வைகளெல்லாம் நீர்த்துப் போகும் அளவுக்கு இருக்கிறது அப்பாவி மக்களின் அவல நிலை.இந்தியா பேசா மடந்தையாக இருப்பதுடன் இலங்கை அரசுக்கு தார்மீக ஆதரவு தருகிறது என்ற நிலைப்பாடு தந்த இறுமாப்பில் இந்த நிலையை முழுதும் உபயோகப்படுத்தி இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும் முற்றாக அழித்து விடலாம் என்ற எண்ணத்துடன்தான் கோத்தபய மற்றும் ராஜபட்சேயின் கூட்டணி செயல்படுகிறது.புலிகளுடன்தான் சண்டையிடுகிறோம் என்று சொல்லும் இந்தக் கூட்டணியின் தாக்குதல்களுக்குப் பெருமளவு பலியாபவர்கள் அப்பாவிகளே!இவர்கள் அனைவரையும் கொன்ற பின்னால்தான் புலிகளை அழிக்க முடியும் என்பது ஒரு கேணவாதம்.அந்த நிலையிலும் புலிகள் பிடிபடவோ அழிபடவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.இன்னும் புலிகளைப் பிடிக்கவோ,அழிக்கவோ இலங்கை விரும்பினால்,அங்குள்ள தமிழர்களின் மனங்களை வென்றால்தான் அது சாத்தியம்;இலங்கையோ அவர்களின் பிணங்களை வெல்கிறது....





இந்தியாவின் மைய அரசு இந்த விவகாரத்தை அணுகுவது சோனியா என்ற தனி மனிதப் பெண்ணின் பார்வையில் தான் என்று கருதுவதற்கான சாத்தியங்கள் மிகவும் தெரிகின்றன.ஒரு அண்டைய தேசத்தின் அரசாக,தமிழர்களை குடிகளாகக் கொண்ட இந்திய அரசு இலங்கை விதயத்தில் மிகத்தவறான பார்வையில்,செயல்பாட்டில் இருக்கிறது.





அமெரிக்க அரசை தலையிட வைக்க வேண்டும் என்ற புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரிதும் முயற்சிக்கும் இந்த வேளையில்,அமெரிக்கா அவல நிலையில் இருக்கும் முல்லைத்தீவு அப்பாவித் தமிழ் மக்களை வெளியேற்றும் நோக்கில் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.





இது நடந்தால் மிக நல்லது.அப்படி அமெரிக்கத் தலையீட்டிலாவது இலங்கைத் தமிழ் மக்களின் அவலம் குறைந்தால் இந்திய அரசு தன் அசட்டு முகத்தைத் எங்கே வைக்கும் என்று தெரியவில்லை!



Friday, February 6, 2009

94.விகடன் தலையங்கம்-ஒரு கேள்வி

'திறமையான தலைவர்களை உருவாக்குவதில் இன்றைய உயர் கல்வித் துறை தோல்வி அடைந்துவிட்டது' என்று வேதனை காட்டியிருக்கிறார், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
தலைமைப் பண்பு எல்லா துறைக்குமே பொதுவானது என்றாலும், அரசியல்தான் இங்கே அதிகம் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகிறது. கட்-அவுட், விளம்பரம், விளக்குத் தோரணம் என்று அரசியல் தலைவர்கள் வலிந்து சூடும் புகழ்மாலைகளின் அடியில் நிஜமான சாதனைத் தலைவர்கள் அமுங்கும் அவலத்தைதான் பார்க்கிறோமே..! மும்பையில் உயிருக்கு அஞ்சாமல் தீவிரவாதிகளை எதிர்கொண்ட அதிகாரிகளும்தானே கொண்டாடப்பட வேண்டிய தலைவர்கள்.
ஆளுங்கட்சியாக இருந்தால் விமர்சனங்கள் பற்றிக் கவலைப்படாமல் முடிந்த வேகத்தில் சுருட்டுவதும்... எதிர்க்கட்சியாக இருந்தால் தங்களின் நேற்றைய கொள்ளையை அடியில் புதைத்துவிட்டு, 'ஐயோ! கொள்ளை போகிறதே' என்று யோக்கிய சிகாமணிகளாக அலறுவதும்தானே 'தலைவருக்கான' இலக்கணமாக இருக்கிறது. அரசியல்தான் என்றில்லை... விளம்பர வெளிச்சத்தால் திணிக்கப்படுகிற மாயத் தலைவர்கள் மற்ற பல துறைகளிலும் இருப்பதை, அவர்களின் முகத்திரை கிழியும்போதெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் பக்குவத்தை இன்றைய கல்வி முறையால் மட்டுமே அளிக்க முடியுமா?
எனவே, கல்விச் சாலைக்கு வெளியில் இருக்கும் உலகமும் ஒரு திறந்தவெளிப் பல்கலைக்கழகம்தான் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். பாடப் புத்தகங்களையும் தாண்டி, தலை நிமிர்த்திப் பார்வையைச் செலுத்த வேண்டும். நிஜமான லட்சியத் தலைவர்களைச் சுயமாகத் தேடிக் கண்டடைய வேண்டும்.
தலைசிறந்த ஒரு குருவைத் தேடி அடையும்போதே கல்விப் பயணத்தின் பாதை கைவசமாகிறது. சரியான ஒரு தலைவனைக் கண்டுகொள்ளும்போதே வாழ்க்கை லட்சியத்தின் பெரும்பகுதி முடிவாகிறது. சத்தியப் பாதையில் நடந்து சாதிக்கும் வெறிகொண்ட இளைஞர்கள் மனமார முயன்றால் போதும்... அவர்களின் தேடலில் வெற்றி நிச்சயமே!


மேலே கண்ட தலையங்கம் இந்த வார விகடன் பத்திரிகையின் தலையங்கம்.தலைவர்கள் உருவாவதின் அவசியம் பற்றி இப்படி பிலாக்கணம் படித்திருக்கும் விகடனுக்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன.

விகடன் மற்றும் குமுதம் ஆகிய இரண்டு பத்திரிகைகளும் தமிழகத்தின் இரண்டு பிரபலமான வாரப்பத்திரிகைகள்.அதுவும் சமீப காலமாக இருபத்திரிகைகளும் ஒன்றையொன்றோ அல்லது ஏதாவது வலைப்பதிவுகளில் இருந்தோ கருத்துத் திருட்டு நடத்தி கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்;அதில் ஒன்றும் தவறில்லை.உலகில் அனைத்து படிப்பாளிகளும் யாராவது ஒருவர் எழுதிய ஏதாவது ஒன்றைப் படித்துத்தான் அறிவைக் கூர்தீட்டிக் கொள்கிறோம்.ஆனால் நாம் குறைந்த பட்சம் அந்த அறிவை அளித்த எழுத்தை அங்கீகரிக்கவோ பாராட்டவோ தவறுவது இல்லை.
ஆனால் கருத்துத் திருட்டு செய்யும் இவர்கள் அந்த குறைந்தபட்ச நாகரிகம் கூட காண்பிப்பது இல்லை.

போகட்டும்,எங்கோ ஆரம்பித்து எங்கோ போய் விட்டோம்..

மேற்சொன்னபடி திருடாத,சில அரிய கணங்களில் சிற்சில சொந்தக் கருத்துக்களை இப்பத்திரிகைகள் எழுதுவதும் உண்டு.அது போன்ற ஒரு தலையங்கம் தான் மேற்சொன்னது.

இளைஞர்கள் தலைமைத்துவம் வளர்ப்பது பற்றி ஆதங்கப்பட்டிருக்கும் விகடன் கடந்த 10 வருடங்களாகச் செய்வது என்ன?அப்படித் தேடும் இளைஞர்களுக்கு எத்தனை நல்ல தலைவர்களை விகடன் அறிமுகப்படுத்தியிருக்கிறது?

நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு நுழைய இருக்கும் சாத்தியங்கள்,கார்த்திக்,சரத்குமார் போன்றவர்களின் அரசியல் பிரவேசம்,களத்தில் காப்டன் என்று நடிகர் விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றிய விளம்பரத் தொடர்(ஏன் இப்போது வி.கா.ந்தே முழித்துக் கொண்டிருக்கிறார் என்று நிறுத்தி விட்டார்கள் போலிருக்கிறது;சமீப காலமாக நான் பார்க்கவில்லை!) அல்லது இவை எல்லாம் இல்லாத போது நடிகர் வடிவேலு வி.கா.ந்தை எதிர்த்து எப்போது கட்சி தொடங்கப் போகிறார் போன்று தலைமைத்துவம் வளர்க்கும் செய்திகளைத் தவிர வேறு எந்த வித பரபரப்பு செய்திகளைத் தந்திருக்கின்றன?

திரைப்பட நடிகர்கள் தவிர்த்த வேறு எந்த சிறந்த மனிதர்களை அவர்களின் அரிய பண்புகளுக்காக தலைமைத்துவத்திற்காக இந்தப் பத்திரிகைகள் பாராட்டி மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கின்றன?

பெருவாரியான மக்கள் வாசிக்கும் இடத்தில் இருக்கும்,பெருவாரியான அதிகம் படிப்பற்ற கிராமங்களில் இருக்கும் மக்களின் கருத்தில் சார்பை அளிக்கும் அளவுக்கு வல்லமை பெற்றிருக்கும் இந்தப் பத்திரிகைகள் திரைநடிகர்கள் தவிர்த்த வேறு எந்த தனிமனிதர்களை அவர்களின் நற்பண்புகளுக்காக,தலைமைத்துவத்திற்காக,சேவைக்காக முன்னிறுத்தியிருக்கிறார்கள்?


தமிழினத்தின் தலைமைக்கு நடிகர்கள் தவிர் வேறு எவரும் இல்லை என்றும் திரைப்பட உலகம் தவிர வேறு எங்கிருந்தும் தலைவர்கள் வர இயலாது என்று கங்கணம் கட்டி எழுதிக் கொண்டிருக்கும் விகடன் போன்ற பத்திரிகைகள் தலைமைத்துவம் நீர்த்துப் போவது பற்றி எழுதுவது வேடிக்கையாகவும் வெட்கப்படும்படியும் இல்லையா?

இன்னும் சொல்லப் போனால் விகடன் குழுமப் பத்திரிகைகளின் அடக்கத்தில்-content- எத்தனை சதவீதம் திரைப்பட உலகம் தொடர்பற்ற செய்திகளாக இருக்கின்றன?தொலைக்காட்சிகளில் கூட அதில் முன்னணியில் இருக்கும் சில சானல்கள்,சினிமா தவிர வேறு எந்த வித அறிவுப் பூர்வமான நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கின்றன ?

தமிழகத்தின் பெருவாரியான இளைஞர்களை திரையுலகம் என்னும் கருமாந்திரம் தவிர வேறு எதிலுமே புத்தி சென்றுவிடாமல் காக்கும் நல்ல விதயத்தை இந்த ஊடகங்கள் கவனமாகச் செய்து வருகின்றன.அதுவே நமது இளைஞர்கள் தமது நாளைய தலைவர்களையும் அந்த பொய்யுலகிலேயே தேடும் பைத்தியக்காரத்தனத்தை செய்யவும் காரணம்.


ஊடகத்துக்கிருக்கும் தார்மீகக் கடமையெல்லாம் குழிதோண்டிப் புதைத்து விட்டு எந்த நடிகனை முன்னிலைப்படுத்தலாம்,அதன் மூலம் எவ்வளவு சர்க்குலேஷனை அதிகரிப்போம் என்ற குறுக்குப் புத்தியில் இருக்கும் இந்த ஊடகங்கள் குறைந்த பட்சம் இது போன்று அங்கலாய்ப்புத் தலையங்கங்களாவது எழுதி வேடமிடாமல் இருக்கலாம்!

Monday, February 2, 2009

93.ஒப்பனை உலகின் சில உண்மை முகங்கள்

முத்து எடுக்கலாம் என்று கடலில் மூழ்குபவன் செத்துப் போவதும் உண்டு;செத்துப் போகலாம் என்று கடலில் விழுபவன் கை நிறைய முத்துக்களை அள்ளிக் கொண்டு வருவதும் உண்டு.படித்ததுமே எனக்குப் பிடித்த வாசகம் இது.இதில் நான் இரண்டாவது ரகம்.எனக்கு முத்து எடுக்கத் தெரியாது என்பது மட்டுமல்ல;முத்து எடுக்க வராது என்று முழுமையாக நம்பிக் கொண்டிருந்தவன் நான்.கடல் வேண்டாம் என்று துப்புகிற கிளஞ்சல்களைக் கூட திறமையாக பொறுக்கத் தெரியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மைதான் என் ஒரே சொத்து.


இப்படித் தொடங்கும் அந்தப் புத்தகம் விவரிப்பது இன்று புகழின் உச்சியில் இருக்கும் ஒரு பிரபலத்தின் இளமைப் பருவம் முதல் சமீப காலம் வரையான கதை.


இன்றைய அவரது உயரத்திற்கும் அவரது இளமைப்பருவ பயங்களுக்கும் தோல்விகளுக்கம் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா என வியக்க வைக்கும் அளவுக்கு சிறுவயது பயங்கள்,தோல்விகளை கண் முன்னே விரித்துப் பரப்பிச் செல்லும் அவரின் மீது பெருமளவு மரியாதை வந்தது உண்மை.


படிக்க எடுக்கும் போது எந்த ஒரு முன் விருப்புகளுமின்றி ஒரு மேம்போக்கான பிதற்றல்களும் சுய பிரதாபங்களும் நிரம்பிய கதையாக இருக்கும் என்றுதான் நினைத்துத்தான் படிக்க ஆரம்பித்தேன்.

ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரே மூச்சில் மூன்று மணி நேரத்தில் தன்னைப் படிக்க வைத்தது அந்த 200 சொச்சம் பக்கப் புத்தகம்!


ஏழாம் வகுப்பில் உங்கள் மகன் தேர்ச்சி அடைவதற்கு வாய்ப்பில்லை;தொடர்ந்து எங்கள் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் நாங்கள் அவனை தேர்வாக்காமல் இருப்பதை விட வேறு வழியில்லை;இல்லை வேறு பள்ளிக்குக் கொண்டு சேர்ப்பதானால் தேர்ச்சி அளித்து பள்ளிமாற்று சான்றிதழ்-ட்ரான்ஸ்பர் சர்டிபிகேட்-தருகிறோம்.என்ன முடிவு சொல்லுகிறீர்கள்? என்று பள்ளித் தலைமையாசிரியர் தந்தையைக் கூப்பிட்டு சொல்லுமளவுக்கு தோல்வியியையும் தோல்வி மனப்பான்மையையும் விடாமல் பிடித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் தன் துறையில் உச்சத்தை தொட்டது மட்டுமல்ல, தமிழகத்திலேயே அழகான பெண்ணின் காதலையும் வென்று வாழ்க்கையிலும் வெற்றி பெற்ற கதையை விவரிக்கும் அந்தப் புத்தகம் நடிகர் சூர்யா என்று அறியப்பட்ட நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சரவணன் தன்னுடைய வாழ்வின் அனுவங்களைச் சொன்ன இப்படிக்கு சூர்யா என்ற புத்தகம்!


0 0 0


ஒரு பிரபல நடிகர் அப்பா;வாழ்வின் அடிப்படையான வசதிகளுக்கு எந்த வித குறைகளும் இல்லை;நல்ல ஆரோக்கியமான சூழலில் அமைந்த வீடு....இப்படி இருந்தும் சிறுவயது சூர்யாவுக்கு தெனாலி கமல் மாதிரி பல பயங்கள் இருந்திருக்கின்றன;இன்னும் சொன்னால் எதில் ஈடுபட்டாலும் நாம் நிச்சயம் தோற்போம் என்று எந்த வித ஐயமும் இல்லாமல் நம்பும் ஒரு சிறுவனாகத்தான் இருந்திருக்கிறார்.


வகுப்பில் ஹிந்தி மொழியோ அல்லது கணக்குக் கேள்விகளோ வரும்போது வரிசைப்படி கேள்வி வரும்போது கேள்வி வரும் முதல் வரிசையைத் தவிர்க்க இரண்டாவது வரிசைக்கு மாறியும்,கேள்வி இரண்டாவது வரிசைக்கு வரும் போது திரும்ப முதல்வரிசைக்கு மாறியும் தப்பிக்கும் மாணவனாக தான் இருந்ததை ஒளிவு மறைவின்றி ஒத்துக் கொள்கிறார் சூர்யா!

ஆனால் இந்தக் குறையுடைய குழைந்தைக்கு தான் ஒரு பிரபல நடிகராக இருந்தும் தனது மகனுக்க ஒரு அப்பாவாக அற்புதமான ஒரு கடமையாளராக சிவகுமார் தன் மகனுக்கான நல்ல வழிகாட்டியாகவே எப்போதும் இருந்திருக்கிறார்,குடும்பத்திற்கான அவரது குவாலிடி நேரம் மிகக் குறைவாகவே கிடைத்த போதிலும்!


மற்றுமொரு விதத்திலும் தனது பயங்களுக்கு உளவியல் ரீதியான வலுவான காரணத்தையும் ஒளிக்காமல் முன்வைக்கிறார் அவர்.


தான் இப்படித் தோல்வியின் இருட்டு மூலைகளுக்குள் முடங்கிய இளவயது சூர்யாவின் அடைக்கலம் பெரும்பாலும் அவரது அம்மா.எல்லாக் குழந்தைகளைப் போலவும் ஏம்மா எனக்கு மட்டும் இப்படி? என்று கேட்டிருக்கிறான் அந்தச் சிறுவன்;ஆனால் திரைப்படங்களில் போல சிறுவயது பாலகனாக இருக்கும்போதே அல்ல;பின்னர் வளர்ந்து வெற்றி வசப்படும் என்ற நம்பிக்கை வந்த காலங்களில்.


மகனின் கேள்விக்கான பதில் அம்மாவின் வார்த்தைகளில்...


மிகவும் கண்டிப்பான ஊர்க் கவுண்டர் எங்க அப்பா.எங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் குறைவற செய்தாலும் ஒரு சினிமாவுக்குப் போகனும்னாலும் தான் போய்ப் பார்த்து விட்டு வந்து அது நல்ல படம்,வன்முறை ஆபாசங்கள் இல்லை என்று தோன்றினால் மட்டுமே பிறகு குழந்தைகளை அழைத்துப் போகிற அப்பா.


இந்த சூழலில் வளர்ந்த எனக்கு ஒரு நாள் கல்லூரியில் இருந்து வந்ததும் ஒரு போட்டோவைக் காட்டினார்கள்,போட்டோவில் கோட் சூட் அணிந்து உன் அப்பா.இவர்தான் மாப்பிள்ளை என்றார்கள்,மனதில் ஒட்டவே இல்லை;போதாதற்கு பிரபல நடிகர் என்றார்கள்,நானோ அவர் நடித்த ஒரு படத்தையும் பார்த்திருக்கவில்லை.பெண்பார்க்கும் போது நேரிலாவது பார்க்கலாம் என்று இருந்தேன்.ஆனால் அவர் வரவில்லை,பெண் பார்த்துவிட்டுப் போனபிறகு ஜாதகம் சரி இல்லை போன்ற பிரச்னைகள் கிளர்ந்தால் பெண் மனதில் தேவையற்ற தாக்கங்கள் ஏற்படும்,பின்னர் பார்க்கிறேன் என்று விளக்கம் சொல்லி நண்பர்களை அனுப்பி வைத்தார் உன் அப்பா.


நேரில் பார்த்துக் கூட முடிவு செய்யாத அவருக்குப் பெண்கள் பற்றிய என்ன கண்ணோட்டம் இருக்கும் என்று நொந்த நான் வேதனையைத் தவிர ஒன்றும் வழி இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்


இப்படியான மன பயத்தில் இருந்த அவருடைய திருமண நிச்சயதார்த்தம் அன்றுதான் அவர் சிவகுமாரைப் பார்த்திருக்கிறார்.திருமணம் நிச்சயிக்கப் பட்ட அன்றே படப்பிடிப்புக்குச் சென்று விட்டிருக்கிறார் சிவக்குமார்.


திருமணத்தன்றும் படப்பிடிப்பில் இருந்து சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கிறார் சிவக்குமார்.திருமணமும் தொடர்ந்த வரவேற்பும் தமிழகத்தின் பல பிரபலங்கள் கூடிய கூட்டம்;சிலருக்கு இந்த வகையான பெரும் பிரபலஸ்தர்கள் கூடி நடந்த திருமணம் மிக்க மகிழ்வை அளித்திருக்கும்;ஆனால் சூர்யாவின் அம்மாவிற்கு ஒரு வகையான மிரட்சியையும் மனத் தயக்கத்தையும்,இவர் ஏதோ அவசரப்பட்டு தன்னைத் திருமணம் செய்திருக்கிறாரோ என்ற விதமான பயங்களையும் சூர்யாவின் அம்மாவுக்கு அளித்திருக்கிறது.


திருமணம் முடிந்த நேரம் சிவகுமார் துணைப்பாத்திரங்களை விட்டு தனி கதாநாயகனாக முன்னேற ஆரம்பித்திருந்த நேரம்;காலையில் படப்பிடிப்புகள் மதியத்திற்குப் பிறகு நாடக உலகம் என்று ஓடிக் கொண்டிருந்த அவர் நல்ல கணவனாக இருக்க பெரிதும் முயன்றும் அதை மனைவி புரிந்து கொள்ளும் அளவிற்கான கால அவகாசம் ஒதுக்கி அவருக்குப் புரியவைக்க இயலாத சூழலும்,பரபரப்பான சென்னை வாழ்க்கையும் ஒரு வித மிரட்சியைத் தந்திருக்கிறது அவரது மனைவிக்கு.


பெரியவர்கள் எல்லாவற்றையும் கருதி கோவையிலிருந்து உடன் துணையாக இருக்கட்டும் என்று அனுப்பி வைத்த சிவகுமாரின் சகோதரி மகளின் எதிர்பாராத வகையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாட்டி பலியாக,அந்த நேரத்தில் அவரது மாமியாருக்கும் பேத்தியின் மரணம் தந்த அதிர்ச்சி உடல் நலத்தை நலிய வைக்க,அந்த நிலையில் சரவணனை சூல் கொண்டிருக்கிறார் அவரது அம்மா.


கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படித்து,ஒரளவு உலகம் புரிந்த பெண்ணாக வளர்ந்த எனக்கே முற்றிலும் புதிய சூழலில் அமைந்த மணவாழ்க்கை இறுக்கமாகவும் போராட்டமாகவும் இருந்தது.எனது தயக்கங்கள்,தவிப்புகள்,குழப்பங்கள் இவற்றோடு ஜானகியின் மரணமும் சேர்ந்து கொள்ள,கருவாக என் வயிற்றிலிருந்த உன்னையும் அது பாதித்திருக்கிறது.அதிலிருந்துதான் மீண்டு வந்திட்டியே கண்ணா.. என்று தலையைக் கோதிவிட்டார் அம்மா என பதிந்திருக்கிறார் சூர்யா.


0 0 0


இந்த வகையான மனத்தயக்கங்களுடைய சிறுவனாக வளர்ந்த சரவணனின் கூட்டப்புழு வாழ்க்கை ஒவ்வொரு கட்டத்திலும் நியதிகளுடன் வாழ்ந்த தந்தையால் எப்படி செப்பம் பெற்று வண்ணத்துப் பூச்சியானது-


நடிகரின் குழந்தைகளாக இருந்தும் சரவணனும் கார்த்தியும் பொதுப் பேருந்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் அளவிற்கு வாழ்வின் நிதர்சனங்களைக் கற்றுக் கொடுத்த அப்பாவின் நெறிப்படுத்துதல்-


மகனுக்குத் தேவைப்பட்ட நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தானே நேரில் தார்மீக ஆதரவு மற்றும் உதவிக்காக தயாராக இருந்த அப்பாவின் அன்பு-


பணியாளர்களுடன் எப்போதும் அன்புடனும் மரியாதையுடன் நடக்க வேண்டிய மனிதப்பண்புகளுடன் அமைந்த சிறுவயது வாழ்வைக் கற்றுக் கொடுத்த அப்பாவின் கவனம்-


எக்ஸ்போர்ட் கம்பெனியில் தன் பெயரைத் தெரிவிக்காது சுயமுயற்சியில் வேலை தேடிக் கொண்ட போது அவரின் மேல் திரைத்துறையைத் திணிக்காமல் அவர் போக்கில் விட்ட பாங்கு-


1200 ரூபாய் சம்பளம் தரும் அந்த வேலைக்காக ஒருநாளின் 20 மணி நேரங்கள் வரை உழைக்க வேண்டிய சூழலிலும் கித்தாப்பான,நடிகரின் மகனாக இல்லாது தொழிலாளர் அனைவரின் அன்புக்குப் பாத்திரமான ஒரு தொழிற்சாலை வேலையாளாகவே உயர்ந்த விதம்-


பின்னால் திரைப்பட உலகம் அழைத்த போது அப்போதும் நீதான் முடிவெடுக்க வேண்டும்.உனக்கு உதவி தேவைப்படும் போது நான் எப்போதும் உன் அருகில் என்ற வகையில் மகனை ஆதரித்த விதம்-


திரைத்துறையில் தொடர்ந்த தோல்வி மனப்பான்மையை உடைக்க உளவியல் ரீதியாகப் பயனளிக்கும் உடல் மற்றும் மனப்பயிற்சியில் தன்னை தந்தை திருப்பி விட்ட விதம்-


ஆரம்பகாலத் தோல்விகளுக்குப் பிறகு நந்தா மற்றும் காக்க காக்க படங்களில் அங்கீகாரம் பெற்ற விதம்-


நேருக்கு நேரில் தொடங்கிய பல தோல்விகளுக்கிடையிலும் கிடைத்த நல்ல மனிதர்களின் உதவிகள்,கற்பித்த பாடங்கள்-


ஜோதிகாவின் அன்பை வென்றது-


அனைத்திற்கும் மேல் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயற்சி செய்யக் கற்றுக் கொண்ட விதம்-


எனப் பொதுவாக ஒரு சினிமாக் காரனின் அனுபவங்களாக இல்லாமல் வாழ்வில் தோல்விகளின் நிழல்களுக்குள்ளிருந்து வெற்றிக்கான வெளிச்சப் புள்ளிகள் வரும் வாய்ப்புகளையும் அதற்கான ஆயத்தங்களையும் சுவையாக சொல்லிச் செல்கிறது புத்தகம்.


0 0 0


பொதுவாக நாம் எதிலாவது அடிக்கடி தோற்றோமெனில் ஒரளவு சுய அலசல் செய்யத் தெரிந்தவர்களுக்கு அதற்கான காரணத்தை அறிவது மிகவும் கடினமான செயலல்ல;அவ்வாறான அலசல்களுக்கப் பின்னர் நம் முயற்சிகளில் வெல்வோமோ தோற்போமோ என்ற ஐயப்பாடு இருக்கும்.


நம்முடைய சுய அலசல் திறன் மேலும் கூர்மையடைந்த பின்னர் செய்யும் முயற்சிகளில் நாம் ஒரளவு அறுதியிட்டு வெல்வோமா தோற்போமா என்பதை கணித்து விட முடியும்.


பின்னர் வருவது அதற்கு அடுத்த நிலை;அதாவது சொல்லி அடிக்கும் நிலை.இந்த வகையில் முயற்சி செய்யும் போதே உறுதியாகத் தெரிந்து விடும்,நாம் வெற்றியடையப் போகிறோம் என்பது. Nothing succeed like success என்று ஒரு சொலவடை உண்டு ஆங்கிலத்தில்! அது விவரிப்பது இந்த மூன்றாவது நிலைதான்.


இந்த மூன்று நிலைகளையும் தொட்டுச் செல்கிறது புத்தகம்.


இப்படிக்கு சூர்யா- ஒரு நல்ல வாசிப்புக்கு உத்தரவாதம் !

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...